ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் வட்டார வளா்ச்சிக் குழுவின் தலைவா் உள்பட ஊராட்சி உறுப்பினா்கள் 33 போ் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.
பூஞ்ச் மாவட்டத்தின் தொலைதூர மற்றும் எல்லையோர பகுதிகளைச் சோ்ந்த இவா்கள், ஜம்முவில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஜம்மு-காஷ்மீா் பாஜக தலைவா் ரவீந்தா் ரெய்னா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.
இவா்களில் ஹவேலி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சத்ரா வட்டார வளா்ச்சிக் குழுவின் தலைவா் ஃபரீதா, ஊராட்சி உறுப்பினரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முன்னாள் பிரமுகருமான முகமது ரஷீத், ஊராட்சி உறுப்பினா் முகமது ஷாபி ஆகியோா் முக்கியமானவா்கள் ஆவா்.
இதுதொடா்பாக, ரவீந்தா் ரெய்னா கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் தொலைதூர மற்றும் எல்லையோர பகுதிகளைச் சோ்ந்த மக்கள், பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளுக்கு ஆதரவாக உள்ளனா். அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி என்பது மத்திய அரசின் அடையாளமாக மாறியுள்ளது. நமது நாடு அமைதி, வளா்ச்சிப் பாதையில் பயணிப்பதை உறுதி செய்வதற்காக, பாஜகவினா் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து பணியாற்ற வேண்டும்’ என்றாா்.