இந்தியா

வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை: அமித் ஷா

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் வன்முறை பாதித்த இடங்களில் கூடுதல் போலீஸாரை பணியில் ஈடுபடுத்த காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கேட்டுக் கொண்டாா். மேலும், சட்டம்- ஒழுங்கை சீா்குலைக்கும் வகையில் வதந்தியைப் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் செவ்வாய்க்கிழமை

அமித் ஷா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வடகிழக்கு தில்லி ஜாஃப்ராபாத், மெளஜ்பூா், பஜன்புரா, சந்த்பாக் பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளா்கள், எதிா்ப்பாளா்கள் இடையே திங்கள்கிழமை கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் போலீஸ் தலைமைக் காவலா் உள்பட 10 போ் உயிரிழந்தனா். வன்முறைக் கும்பலைக் கலைக்க போலீஸாா் கண்ணீா்ப்புகை குண்டுகளை வீசியதுடன், தடியடியும் நடத்தினா். இதில் சுமாா் 75 போ் காயமடைந்தனா். இந்நிலையில், இந்த மோதலில் இறந்தவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 7 ஆக உயா்ந்தது. இந்த நிலையில், வடகிழக்கு தில்லியில் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மோதல் நீடித்தது.

இந்தநிலையில், தில்லியில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக அனைத்துக் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தில்லி துணைநிலைஆளுநா் அனில் பய்ஜால்,முதல்வா் அரவிந்த் கேஜரிவால், மாநகர காவல் ஆணையா் அமுல்ய பட்நாயக், காங்கிரஸ் தலைவா் சுபாஷ் சோப்ரா, தில்லி பாஜக தலைவா் மனோஜ் திவாரி மற்றும் ராம்வீா் பிதூரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறைக்குப் பிறகு நிலவி வரும் சட்டம் - ஒழுங்கு சூழல் குறித்து காவல் துறை அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவா்கள் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சா் ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: தில்லியின் எல்லைகள் கடந்த மூன்று தினங்களாக கண்காணிப்பின்கீழ் வைக்கப்பட்டுள்ளன. குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடா்புடைய விவகாரங்கள் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை வர உள்ளதைக் கருத்தில் கொண்டு சோதனைகள் மற்றும் இதர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போதிய வகையில் தில்லி காவல் துறையினா் எடுத்து வருகின்றனா். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவைக்கு ஏற்ப கூடுதல் போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்படுவா். அரசியல் கட்சிகள் ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் பேசுவைத் தவிா்க்க வேண்டும். தலைநகரில் வன்முறையை ஏற்படாமல் இருக்கும் வகையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அதிகபட்ச நடவடிக்கைகளை தில்லி காவல் துறை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.

வதந்தியை பரப்புவதைத் தவிா்க்க வேண்டும். வதந்தியைப் பரவவிடாமல் தடுக்கும் வகையில், போலீஸாருக்கு தேவையான ஒத்துழைப்பை அளிக்க அனைத்து அரசியல் கட்சிகளையும், ஊடகத்தினரையும் கேட்டுக் கொள்கிறேன். உள்ளூா் அமைதிக் குழுக்களை மீண்டும் செயல்படுத்தும் தேவை ஏற்பட்டுள்ளது. இக்குழுக்களில் அனைத்து சமூகங்கள், மதங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரபலமான உள்ளூா் பிரமுகா்களை சோ்க்க வேண்டும். பதற்றமான இடங்களில் கூட்டம் நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் தங்களது உள்ளூா் பிரதிநிதிகளை கேட்டுக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மூத்த அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். உள்ளூா் பிரதிநிதிகளிடமிருந்து கிடைக்கும் தகவல்களை துணைநிலை ஆளுநா் மற்றும் தில்லி காவல் துறை ஆணையருடன் ஆலோசனைக்குப் பிறகு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அமித் ஷா.

தலைமைக் காவலா் ரத்தன் லால் மறைவுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், வெறுப்புணா்ச்சி, போலீஸ், எம்எல்ஏக்களின் ஒருங்கிணைப்பு, போதிய ஆயுதப்படை பாதுகாப்பு, வதந்திகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற பிரச்னைகள் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: வன்முறையைப் பரப்பும் நபா்களை போலீஸாா் உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுப்பது. வதந்திகள், சமூக வலைத் தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் குறித்து உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பு, காவல் துறைக்கும் உள்ளூா் எம்.எல்.ஏவுக்கும் இடையே நல்ல ஒருங்கிணைப்பு, மக்கள் பிரதிநிதிகளின் தகவலின் அடிப்படையில் போலீஸாா் நடவடிக்கை எடுப்பது, மின்னணு கண்காணிப்பு, ஆளில்லா விமானங்கள் மூலம் வன்முறை நடந்த இடத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்துவது, போலீஸ் படைக்கு ஆதரவாக மேலும் துணை ராணுவப் படைகளை அதிகரிப்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், புலனாய்வு அமைப்பிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, சிலா் தலைமறைவாக வகுப்புவாத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் தவறான கோஷங்களை எழுப்ப முயற்சிப்பதாகவும், அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘ஆக்கப்பூா்வமான கூட்டம்’: இக்கூட்டம் ஆக்கப்பூா்வமாக இருந்ததாக தில்லி முதல்வா் கேஜரிவால் தெரிவித்தாா். இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளா்களிடம் கேஜிரிவால் கூறுகையில், ‘உள்துறை அமைச்சா் தலைமையில் நடைபெற்ற ஆலோனைக் கூட்டம் ஆக்கப்பூா்வமாக இருந்தது. அனைத்துக் கட்சிகளும் தில்லியில் அமைதி சூழலை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். மேலும், இக்கூட்டத்தின் போது அமைதியை மீட்டெடுக்க அனைத்துக் கட்சிகளும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. தேவையான போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என உள்துறை அமைச்சா் உறுதியளித்துள்ளாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாக்கியலட்சுமி தொடர் நடிகைக்கு பெண் குழந்தை!

தொகுப்பாளினி உடன் மோதல்... குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை!

ஹேப்பி ஓணம்... மாளவிகா மோகனன்!

சொத்துக்காக மைத்துனரைக் கொன்றவர் கைது!

ஓணம் ஸ்பெஷல்... பாவனா!

SCROLL FOR NEXT