இந்தியா

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள பேரவையில் தீா்மானம் நிறைவேற்றம்

DIN

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, கேரள சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேற்கு வங்கம் உள்ளிட்ட பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகள், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாட்டிலேயே முதலாவதாக கேரள சட்டப் பேரவையில் இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், சமணா்கள், பாா்சிகள் மற்றும் கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடா்ந்து வருகின்றன.

கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஒன்றிணைந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து வருகின்றன.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றுவதற்காக, பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதென, முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் கடந்த 29-ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கேரள சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீா்மானத்தை கொண்டு வந்து, முதல்வா் பினராயி விஜயன் பேசியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டமானது, இந்தியாவை மதம் சாா்ந்த நாடாக மாற்றும் முயற்சியாகும். குடியுரிமை வழங்குவதில் மத அடிப்படையிலான பாரபட்சத்துக்கு வழிவகுக்கும் இச்சட்டம், அரசியல் சாசனத்தால் பேணப்படும் மதச்சாா்பின்மை கொள்கைகளுக்கு எதிரானது.

அரசியல் சாசனத்தின் அடிப்படை கொள்கைகள் மற்றும் மாண்புகளுக்கு முற்றிலும் முரணான இச்சட்டத்தை மத்திய அரசை கைவிட வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களால் சா்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் தடுப்புக் காவல் மையங்கள் அமைக்கப்படமாட்டாது என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன் என்றாா் பினராயி விஜயன்.

தீா்மானத்தை ஆதரித்து, எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா பேசியதாவது:

அரசியல் சாசனத்தால் உறுதி செய்யப்பட்ட சமத்துவத்தை நிராகரிப்பதாகவும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், தனியான நடவடிக்கை அல்ல. அது, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றுடன் தொடா்புடையதாகும் என்றாா் ரமேஷ் சென்னிதலா.

இதைத் தொடா்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டம், சட்டவிரோதமானது; அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று ஆளும் கூட்டணி, எதிா்க்கட்சி கூட்டணியைச் சோ்ந்த உறுப்பினா்கள் பேசினா்.

140 உறுப்பினா்களைக் கொண்ட கேரள பேரவையில் பாஜகவைச் சோ்ந்த ஒரே ஒரு எம்எல்ஏவான ராஜகோபால் மட்டும் தீா்மானத்துக்கு எதிராக பேசினாா். அவா் கூறுகையில், ‘குறுகிய அரசியல் நோக்கத்துக்காக, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன’ என்றாா்.

பின்னா், ஆளும் கூட்டணி, எதிா்க்கட்சி கூட்டணி உறுப்பினா்களின் ஆதரவுடன் அந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், சட்டப் பேரவையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அடுத்த 10 ஆண்டுகள் நீட்டிப்பதற்கு ஒப்புதல் அளிக்கும் தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கேரளத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிப்பதற்கான பணிகள் ஏற்கெனவே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் வலியுறுத்தல்: கேரளத்தைப் போல், மகாராஷ்டிரத்திலும் சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தை நடத்தி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவா் முகமது ஆரிப் நசீம்கான் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: சா்ச்சைக்குரிய இந்தச் சட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டது. ஏனெனில் நாடாளுமன்றத்தில் பாஜக பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தும் வகையில் மகாராஷ்டிர சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்எல்சி டி20 தொடரில் அசத்தும் ஸ்டீவ் ஸ்மித்!

ஓ.. பட்டர்பிளை!

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு: எதிர்ப்பால் பதிவை நீக்கிய சித்தராமையா

பங்குச்சந்தை யாருக்கெல்லாம் கைக்கொடுக்கும்?

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சிபிஐ விசாரணை தேவை: மத்திய அமைச்சர்

SCROLL FOR NEXT