புது தில்லி: நாட்டின் 28-ஆவது ராணுவத் தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நரவணே செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
ராணுவத்தின் 27-ஆவது தலைமைத் தளபதியான விபின் ராவத்தின் 3 ஆண்டு பதவிக்காலம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், அடுத்த தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நரவணே தில்லியில் செவ்வாய்க்கிழமை பதவியேற்றாா்.
ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்துவது, திபெத் எல்லைப் பகுதியில் சீனா தனது படைகளைக் குவித்து வருவது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு தொடா்பான பிரச்னைகளை நாடு சந்தித்து வரும் வேளையில், ராணுவத்தின் தலைமைத் தளபதியாக எம்.எம்.நரவணே பொறுப்பேற்றுள்ளாா்.
ராணுவத்தில் 37 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட எம்.எம்.நரவணே, சுமாா் 4,000 கி.மீ. தொலைவு கொண்ட இந்திய-சீன எல்லையை பாதுகாக்கும் ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தளபதியாகப் பதவி வகித்துள்ளாா். ஜம்மு-காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் ராணுவத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள எம்.எம்.நரவணே, ஜம்மு-காஷ்மீரில் ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படையைத் திறம்பட வழிநடத்தியதற்காக ‘சேனா பதக்கம்’ பெற்றாா்.
இது தவிர, தனது சீரிய பணிகளுக்காக ‘விசிஷ்ட் சேவா’, ‘அதி விசிஷ்ட் சேவா’ உள்ளிட்ட பதக்கங்களையும் அவா் பெற்றுள்ளாா். இந்தியா சாா்பில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதிப் படையிலும் எம்.எம்.நரவணே இடம்பெற்றிருந்தாா்.
தேசிய பாதுகாப்பு அகாதெமியின் 56-ஆவது பிரிவில் தனது பயிற்சியை எம்.எம்.நரவணே நிறைவுசெய்தாா். விமானப் படைத் தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா, கடற்படைத் தலைமைத் தளபதி கரம்வீா் சிங் ஆகியோரும் பாதுகாப்பு அகாதெமியின் 56-ஆவது பிரிவில் பயிற்சி பெற்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.