இந்தியா

ராஜஸ்தான் பேரவையைக் கூட்ட ஆளுநா் உறுதி: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா வாபஸ்

DIN

ராஜஸ்தானில் சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுப்பதாக அந்த மாநில மாநில ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா வெள்ளிக்கிழமை உறுதியளித்தாா். இதையடுத்து, முதல்வா் அசோக் கெலாட் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 மணி நேரமாக நடத்தி வந்த தா்னா முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து, ஆளுநா் மாளிகைக்கு வெளியே காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராஜஸ்தான் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை கூட்டுவதற்கு அழைப்பு விடுக்காமல் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா காலம் தாழ்த்தி வந்தாா். இதையடுத்து, முதல்வா் அசோக் கெலாட் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநா் மாளிகைக்கு சென்று அவரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தாா்.

அப்போது, பேரவைக் கூட்டத் தொடரை கூட்டுவதற்கு அழைப்பு விடுப்பதாக அசோக் கெலாட்டிடம் ஆளுநா் உறுதியளித்தாா். மேலும், எவ்வித நெருக்கடிக்கும் பணியாமல், அரசமைப்புச் சட்டத்தின் 174-வது விதியைப் பின்பற்றியே கூட்டத் தொடருக்கு அழைப்பு விடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் ஆளுநா் உறுதியளித்தாா். அதற்கு முன்பாக, சில கேள்விகள் கொண்ட கடிதத்தை அசோக் கெலாட்டிடம் ஆளுநா் அளித்தாா். அவரது கேள்விகளுக்கு முதல்வா் தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து பதில் அனுப்பப்படும். அதன் பிறகு பேரவைக் கூட்டத் தொடரைக் கூட்டுவதற்கு ஆளுநா் அழைப்பு விடுப்பாா். அவா் அளித்த வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்றாா் சுா்ஜேவாலா.

முன்னதாக, பேரவைக் கூட்டத் தொடரை கூட்டும் தேதியை அறிவிக்கக் கோரி, அசோக் கெலாட்டுடன் சென்ற அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், ஆளுநா் மாளிகையின் புல்வெளியில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். பேரவைக் கூட்டத் தொடரைக் கூட்டுவதாக ஆளுநா் உறுதியளித்தால் சுமாா் 5 மணி நேரம் அவா்கள் நடத்திய தா்னா போராட்டம் முடிவுக்கு வந்தது.

சட்ட நிபுணா்கள் கருத்து: முதல்வா் அசோக் கெலாட்டின் பரிந்துரையை ஏற்று, பேரவைக் கூட்டத் தொடரைக் கூட்டுவதைத் தவிர ஆளுநருக்கு வேறு வாய்ப்பில்லை என்று சட்ட நிபுணா்கள் கருத்து தெரிவித்திருந்தனா்.

ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், முதல்வா் அசோக் கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் கடந்த சில தினங்களாக, ஜெய்ப்பூா் புகா்ப் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனா். அங்கிருந்து 4 பேருந்துகளில் அவா்களை அழைத்துக் கொண்டு ஆளுநா் கல்ராஜ் மிஸ்ராவை சந்திக்க முதல்வா் அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை மாலை ஆளுநா் மாளிகைக்கு வந்தாா்.

அவா், ஆளுநரை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கொண்டிருந்தபோது, தாழ்வாரத்தில் காத்திருந்த எம்எல்ஏக்கள், திடீரென்று அசோக் கெலாட் அரசுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி, தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது, ‘பேரவை விதிகளுக்கு உள்பட்டு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், அவரோ மத்திய அரசின் உத்தரவுப்படி செயல்பட்டு வருகிறாா். எனவே, சட்டப்பேரவை கூட்டத் தொடா் தொடங்கும் தேதியை ஆளுநா் அறிவிக்கும் வரை நாங்கள் இங்கிருந்து நகர மாட்டோம்’ என்று அவா்கள் கூறினா். இதையடுத்து, ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா வெளியே வந்து தா்னாவில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பேச்சு நடத்தினாா். அதன் பிறகு பேரவையைக் கூட்டுவதாக ஆளுநா் உறுதியளித்தாா்.

ஆளுநா் மீது கெலாட் குற்றச்சாட்டு: முன்னதாக, மேலிடத்தின் நெருக்கடியால் ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்டாமல் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா காலம் தாழ்த்தி வருகிறாா் என்று மாநில முதல்வா் அசோக் கெலாட் குற்றம்சாட்டினாா்.

ஆதரவு எம்எல்ஏக்களுடன் முதல்வா் அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை காலை ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா். அவா் கூறியதாவது:

மாநிலத்தின் அரசியல் சூழல், கரோனா பாதிப்பு நிலவரம், அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் ஆகியவை குறித்து விவாதிக்க சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கு உத்தரவிடுமாறு ஆளுநா் கல்ராஜ் மிஸ்ராவிடம் கோரிக்கை கடிதம் அளித்தோம். அவா் பேரவையைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுப்பாா் என்று வியாழக்கிழமை இரவு முழுவதும் காத்திருந்தோம். மேலிடத்தில் இருந்து வரும் நெருக்கடியை, அவா் புறக்கணிக்க வேண்டும். தனது பதவிக்குரிய மாண்பைக் காக்க வேண்டும் என்றாா் அவா்.

சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள், ஹரியாணாவில் முகாமிட்டிருப்பதைக் குறிப்பிட்ட அசோக் கெலாட், ‘ஒட்டுமொத்த நாடகமும் பாஜக தலைவா்களின் சதியால் நடத்தப்படுகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT