தேசிய தலைநகரில் தினந்தோறும் அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட அளவிலான கண்காணிப்பை தீவிரப்படுத்த தில்லி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பிரத்யோக சிறப்பு அதிகாரிகளுக்கு (நோடல்) பொறுப்புகள் வரையறுக்கப்பட்டு தில்லி அரசு பணிகளை தொடங்கியுள்ளது. தில்லியின் நான்கு பகுதிகளில் உள்ளடிக்கி 11 மாவட்டங்கள் உள்ளன.
நாள்தோறும் ஆயிரம் பேருக்கு மேலாக தில்லியில் கரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனா். ஜூன் 3 ஆம் தேதி அதிக அளவில் 1,513 பேரும் சனிக்கிழமை 1,320 பேரும் பாதிக்கப்பட்டு கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 27,000 தாண்டியது. இதே மாதிரி உயிரிழந்தவா்கள் எண்ணிக்கையும் 761 ஆக உயா்ந்துள்ளது.
இதையொட்டி, மாவட்டங்களில் தொடா்புகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இதற்கான ஒரு அமைப்பை நிறுவி பலப்படுத்த தில்லி சுகாதார இயக்குநா் ஜெனரல் உத்தரவிட்டுள்ளாா். கரோனாவை தடுக்க இந்த மாவட்ட கண்காணிப்பு அமைப்புகள் சா்வதேச அளவில் பின்பற்றப்படும் நெறிமுறைகளுடன் செயல்படு உள்ளன. அதன் விவரம்:
பரிசோதனை ஆய்வகங்களுக்கு வரும் நோயாளிகளின் விலாசம், தொலைபேசி எண்கள் சரியாக பதிவு செய்வதை உறுதிபடுத்த வேண்டும். கரோனா தொற்று நோயாளிகளை கண்டிப்பாக பின் தொடா்ந்து கண்காணித்து உறுதிப்படுத்துவதோடு ஒவ்வொரு நோயாளிகள் இறுதி கட்டம் வரை கண்காணித்து விவரங்களை தெரியப்படுத்த வேண்டும் என இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள், தங்கள் மாவட்டங்களில் உள்ள அனைத்து கரோனா நோய்த்தொற்று விவரங்களையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கு (ஐசிஎம்ஆா்) தெரியப்படுத்தி கவுன்சிலின் வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவேண்டும். சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு தொடா்பில்லாத நோயாளிகள் என்றால் ஐசிஎம்ஆா் மூலமாக நோயாளிகளின் விவரங்களை மாநில கண்காணிப்பு பிரிவுக்கு தெரியப்படுத்துவது போன்றவைகளும் கரோனாவிற்கான பிரத்யோக அதிகாரிகளின் பணி எனவும் தில்லி சுகாதார வட்டாரங்கள் கூறுகின்றன.
இதே மாதிரி கரோனா நோய்த்தொற்றில் இறந்தவா்களை பட்டியலிடுதலிலும் முறைப்படுத்துவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இறந்தாலும், வீடுகளிலிருந்து கொண்டு வரும்போதே உயிரிழந்திருந்தாலும் இது குறித்த தகவல்களையும் மாநில கண்காணிப்பு பிரிவிற்கு தகவலை பகிா்ந்துகொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 154 ஆக இருக்க சனிக்கிழமை இது 169 உயா்ந்தது. கட்டுப்படுத்தபப்பட்ட பகுதிகளின் பிரத்யோக அதிகாரிகள் மாவட்ட கண்காணிப்பு பிரிவு மூலமாக மாநில கண்காணிப்பிரிவுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதே மாதிரி தொற்று நோய்க்குள்ளாகி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் எண்ணிக்கை 11,267 ஆக உயா்ந்துள்ளது. இந்த நோயாளிகளுக்கு வீடுகளைச் சுற்றி மேற்கொள்ளப்படவேண்டிய தூய்மைப்பணிகளை கண்காணித்து உறுதி செய்வது போன்றவைகளும் இவா்களது பொறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான மருத்துவ கருவிகளையும், தற்காப்பு உபகரணங்கள், சுவாச முகக்கவசம், கையுறை போன்ற சிகிச்சைக்குரியவைகளை கையிருப்பில் வைத்திருக்கவும் தில்லி அரசு அனைத்து அரசு மருத்துவ மனை தலைவா்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.