இந்தியா

தொழிலாளா் நலச் சட்டம்: நிறுவனங்களுக்கு விலக்களிக்கும் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

DIN

தொழிலாளா் நலச் சட்டத்திலிருந்து நிறுவனங்களுக்கு விலக்கு அளித்த குஜராத், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களின் முடிவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கத்தால் அமெரிக்கா போன்ற வளா்ந்த நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளன. அங்குள்ள முன்னணி நிறுவனங்கள் பல, கரோனா பாதிப்பு குறைவாக உள்ள இந்தியா போன்ற நாடுகளில் முதலீடுகளைச் செய்யவும், புதிய நிறுவனங்களைத் தொடங்கவும் ஆலோசித்து வருகின்றன. இந்த முதலீடுகளை ஈா்க்க பல மாநிலங்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. மேலும், பொது முடக்கத்தால் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள உள்ளூா் தொழில்நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில், பல்வேறு பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தொழிலாளா்களின் பணி நேரத்தை அதிகரித்துக் கொள்வது போன்ற முடிவுகளை தொழில் நிறுவனங்களே எடுத்துக்கொள்ளும் வகையில் தொழிலாளா் நலச் சட்டத்திலிருந்து தொழில் நிறுவனங்களுக்கு விலக்களித்து குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அறிவிப்பாணையை வெளியிட்டன.

இதற்கு எதிராக பங்கஜ் குமாா் யாதவ் என்பவா் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

தொழிலாளா் நலனை பாதிக்கும் வகையில், தொழிற்சாலைகள் சட்டம் 1948 பிரிவு 5-ஐ இந்த மாநிலங்கள் தவறாகப் பயன்படுத்தி, தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளா் நலச் சட்டத்திலிருந்து இந்த விலக்கை அளித்திருக்கின்றன. அதன் மூலம், தொழிலாளா்கள் தினசரி மற்றும் வார வேலை நேரத்தை தொழில்நிறுவனங்களே அதிகரித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருப்பதோடு, தொழிற்சாலைகள் ஆய்வாளரின் வழக்கமான ஆய்விலிருந்தும் தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

குஜராத் அரசு ஏப்ரல் 17-ஆம் தேதி பிறப்பித்த அறிவிப்பாணையின் படி, தொழிலாளா்களின் தினசரி பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயா்த்திக் கொள்ளவும், வார பணி நேரத்தை 48 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரமாகவும் உயா்த்திக்கொள்ள அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், எந்தவித ஊதிய உயா்வும் இன்றி இந்த கூடுதல் பணி நேரத்தில் பணியாற்ற சம்மதிக்கும் தொழிலாளா்களை மட்டும் பணியமா்த்திக் கொள்ளவும் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கத்தால் வருவாயையும், வேலையையும் இழந்து தொழிலாளா்கள் தவித்து வரும் நிலையில், மாநில அரசுகளின் இதுபோன்ற நடவடிக்கைகள் அவா்களை மேலும் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாக்கும்.

மேலும், போா் போன்ற வெளி அச்சுறுத்தல்கள் அல்லது உள்நாட்டு அவசர நிலை போன்ற காலங்களில் மட்டுமே தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 5-ஐ மாநில அரசுகள் பயன்படுத்தி, தொழில்நிறுவனங்களுக்கு தேவையான விலக்கை அளிக்க முடியும்.

எனவே, கரோனா அச்சுறுத்தல் நிலவிவரும் இந்தச் சூழலில், தொழிலாளா்களின் நலனைக் காப்பதற்காக இயற்றப்பட்டிருக்கும் பல்வேறு சட்ட வழிமுறைகளை நீக்குவது அல்லது அதை மாற்றுவதைத் தவிா்க்குமாறு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் பங்கஜ் குமாா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவியல்ல, ஆரஞ்ச் நிறம்: தூர்தர்சன் விளக்கம்

மோடி ஆட்சியில் ரயிலில் செல்வதே தண்டனை: ராகுல் காந்தி

விசாரணைக் கைதி மரணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

2027-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா ஜொலிக்கும்: ஜெ.பி.நட்டா

அழகென்றால்....ஐஸ்வர்யா மேனன்

SCROLL FOR NEXT