இந்தியா

சத்தீஸ்கர், மகாராஷ்டிரத்திலிருந்து 100 நக்சல்கள் ம.பி.க்குள் ஊடுருவல்

DIN

சத்தீஸ்கர், மகாராஷ்டிரத்திலிருந்து சுமார் 100 நக்சல்கள் மத்திய பிரதேச மாநிலத்துக்குள் கடந்த சில மாதங்களாக ஊடுருவியுள்ளனர்; இதையடுத்து, நக்சல்கள் பதுங்கியுள்ளதாக கருதப்படும் பகுதிகளில் 6 கம்பெனி துணை ராணுவப் படையினரை பாதுகாப்புப் பணிக்கு அனுப்பும்படி மாநில அரசு கோரியுள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 இதுதொடர்பாக அந்த அதிகாரி கூறியது: எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, நக்சல்கள் இந்த பிராந்தியத்தில் தங்களது தளத்தை விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய பிரதேசத்துக்குள் ஊடுருவியுள்ளனர். 6 நக்சல் குழுக்கள் பாலாகாட், மாண்ட்லா மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. பாலாகாட் மாவட்டத்தில் கடந்த நவம்பர், டிசம்பரில் காவல் துறையினருடன் நடந்த மோதலில் 3 பெண் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
 இவர்களில் இருவர் சத்தீஸ்கரையும், ஒருவர் மகாராஷ்டிரத்தையும் சேர்ந்தவர்கள். இதிலிருந்தே அண்டை மாநிலங்களிலிருந்து மத்திய பிரதேசத்துக்குள் நக்சல்கள் ஊடுருவியுள்ளதை அறியலாம். கடந்த செப்டம்பரில் சத்தீஸ்கரிலிருந்து பாலாகாட்டுக்குள் ஊடுருவிய நக்சல் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். இரு மாநில போலீஸாரால் தேடப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சாரதா (25) என்ற பெண் நக்சல் கடந்த நவம்பரில் கொல்லப்பட்டார்.
 இதேபோல் சத்தீஸ்கரை சேர்ந்த சாவித்ரி என்ற அயாதே (24), மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஷோபா கௌடே (30) ஆகியோர் பாலாகாட்டில் டிசம்பரில் நடந்த மோதலில் கொல்லப்பட்டனர். இதுதவிர சத்தீஸ்கரை சேர்ந்த பாதல் சிங் மார்க்கம் என்ற நக்சல் கடந்த செப்டம்பரில் பாலாகாட்டில் கைது செய்யப்பட்டார்.
 மாநில அரசு கோரியுள்ள துணை ராணுவப் படையினர் வந்ததும் அவர்கள் பாலாகாட்டுக்கும், பழங்குடியினர் நிறைந்த மாண்ட்லா மாவட்டத்துக்கும் அனுப்பப்படுவார்கள். மாநில காவல் துறையின் நக்சல் எதிர்ப்புப் படை பிரிவினர் ஏற்கெனவே பாலாகாட்டில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
 இதுதவிர ஒரு பட்டாலியன் சிஆர்பிஎஃப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அக்னிவீா்‘ வாயு தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சாலையோரம் நின்ற காா் தீக்கிரை

கூலித் தொழிலாளி குத்தி கொலை

ஏகாம்பரநாதா் கோயிலில் அதிசய மாமரம்! ஆா்வத்துடன் பாா்க்கும் சுற்றுலா பயணிகள்

SCROLL FOR NEXT