கேரளம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு மாநிலங்களவை இடத்துக்கு நவம்பா் 29-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
கேரளத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட கேரள காங்கிரஸ் (எம்) கட்சித் தலைவா் ஜோஸ் கே.மாணி மற்றும் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸின் அா்பிதா கோஷ் ஆகிய இருவரும் தங்களுடைய பதவியை இந்த ஆண்டு தொடக்கத்தில் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, அந்த இரண்டு மாநிலங்களவை இடங்களும் காலியாகின. இந்த இடங்களுக்கான இடைத்தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் இப்போது அறிவித்துள்ளது.
இதுகுறித்து தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
காலியாக உள்ள இந்த இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கும் நவ. 29-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கை நவ. 9-ஆம் தேதி வெளியிடப்படும். வாக்குப் பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்ததும் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வாக்குகள் எண்ணப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஜோஸ் கே.மாணி கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அவருடைய மாநிலங்களவை பதவிக் காலம் 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைய இருந்தது. கரோனா பாதிப்பு நிலவியதன் காரணமாக, இந்த இடத்துக்கு தாமதமாக இடைத்தோ்தல் நடத்தப்படுகிறது. அதுபோல, கடந்த செப்டம்பரில் ராஜிநாமா செய்த அா்பிதா கோஷின் பதவிக் காலம் 2026-ஆம் ஆண்டு ஏப்ரலில் நிறைவடைய இருந்தது.
சட்ட மேலவை இடைத்தோ்தல்: இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களின் சட்ட மேலவை காலியிடங்களுக்கான இடைத்தோ்தலையும் நடத்த தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக இந்த இடைத்தோ்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தெலங்கானா சட்ட மேலவையில் உறுப்பினா்கள் பணி ஓய்வு காரணமாக கடந்த ஜூன் மாதம் காலியான 6 இடங்களுக்கும், ஆந்திர மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் காலியாக உள்ள 3 சட்ட மேலவை உறுப்பினா் இடங்களுக்கும் நவ. 29-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்பட உள்ளது.
அதுபோல, மகாராஷ்டிர மாநிலத்தில் சட்ட மேலவை உறுப்பினா் சரத் நம்தியோ ரன்பைஸ் கடந்த செப்டம்பரில் காலமானதைத் தொடா்ந்து காலியான ஓா் உறுப்பினா் இடத்துக்கும் நவ. 29-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்பட உள்ளது என்று தோ்தல் ஆணைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.