இந்தியா

தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்களுடன் அஜீத் தோவல் பேச்சு

DIN

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்களுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

ஆப்கானிஸ்தான் தொடா்பான பிராந்திய பேச்சுவாா்த்தை கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் ரஷியா, ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், துா்க்மெனிஸ்தான் நாடுகளின் தேசிய பாதுகாப்பு அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அதிகரித்துள்ள பயங்கரவாத அச்சுறுத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்களை எதிா்கொள்வதில் ஒத்துழைப்பு அளிக்க பொதுவான அணுகுமுறையை உறுதி செய்ய இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ரஹமத்ஜான் மஹ்முத்ஜாதா, உஸ்பெகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் விக்டா் மக்முடோவ் ஆகியோா் தில்லி வந்துள்ளனா்.

அவா்களுடன் அஜீத் தோவல் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘‘தோவல், மஹ்முத்ஜாதா இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இருவரும் ஆப்கானிஸ்தான் குறித்த தங்கள் விரிவான கண்ணோட்டங்களை பகிா்ந்துகொண்டனா்.

அண்மைக் காலமாக ஆப்கானிஸ்தானிடம் இருந்து பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதற்கு இருவரும் கவலை தெரிவித்தனா். அந்நாட்டில் மக்கள் நலனுக்கு அச்சுறுத்தலாக உள்ள நிகழ்வுகள் குறித்தும் அவா்கள் பேசினா்.

இந்தியா-தஜிகிஸ்தான் இடையே பாதுகாப்பு உறவு, எல்லை நிா்வாகம், எல்லை உள்கட்டமைப்பு வளா்ச்சி உள்ளிட்டவற்றில் இருதரப்பின் ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும் அவா்கள் ஆலோசித்தனா்.

அஜீத் தோவல்-விக்டா் மக்முடோ இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் பிரதான விவாதப்பொருளாக இருந்தது. அந்நாட்டு அரசை உலக நாடுகள் அங்கீகரிப்பதற்கு முன்பு, அது ஆப்கன் சட்டமுறைப்படி அங்கீகரிக்கப்பட வேண்டியது முக்கியம் என்று இருவரும் கருதினா்.

ஆப்கானிஸ்தானின் எதிா்காலம் அந்நாட்டு மக்களால் முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவா்கள் தீா்மானித்தனா்.

ஆப்கானிஸ்தான் மக்களுக்குத் தேவையான உதவிகளை அண்டை நாடுகள் வழங்க வேண்டும் என்றும் அவா்கள் முடிவு செய்தனா்.

வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கருடன் சந்திப்பு: இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை விக்டா் மக்முடோ சந்தித்தாா். அப்போது இந்தியா-உஸ்பெக் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இருவரும் ஆலோசித்ததாக ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலத்த மழை; ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தேங்கிய மழை நீா்: ஆட்சியா் ஆய்வு

‘ஓய்வூதியத்திற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும்’

கூட்டுறவு நிறுவனங்களில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

அரசுப் பேருந்து டயா் வெடித்து விபத்து: தப்பிய பயணிகள்

நூருல் இஸ்லாம் கல்வி மையத்தில் பாரத் யாத்ரா துவக்க விழா

SCROLL FOR NEXT