இந்தியா

தோண்டத் தோண்ட திகிலூட்டும் தகவல்கள்: 3 ஆண்டுகளில் ரூ.500 கோடி பரிவர்த்தனையா?

DIN


கொல்கத்தா: அமலாக்கத் துறையினர் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் மேற்கு வங்கத்தில் நடந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் தோண்டத் தோண்ட திகிலூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் கடந்த 2016 - 2019ஆம் ஆண்டுக்குள் அதாவது வெறும் 3 ஆண்டுகளில் ஏராளமான வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.500 கோடி அளவுக்கு பணப்பரிவர்த்தனை செய்திருக்கும் புதிய தகவலை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது.

அவ்வளவு ஏன், கடந்த மாதம் இருவரும் கைது செய்யப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு கூட, ரூ.1.5 கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய விசாரணையில், சட்டர்ஜியின் மனைவி பப்ளி, மகள் சோஹினி, மருமகன் கல்யாண்மோய் பட்டாச்சார்யா ஆகியோரும், சந்தேகத்துக்கு உரிய பல நிறுவன விவகாரங்களில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அர்பிதாவின் பெயர் மற்றும் சோதனை நடத்தப்பட்ட ஒரு குடியிருப்பின் முகவரியில் ஒரு ஷெல் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, அதன் மூலமும் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. ஆனால், அந்த நிறுவனத்துக்கு என்று அலுவலகமோ, ஊழியர்களோ இருந்திருக்கவில்லை என்று அமலாக்கத் துறை கூறகிறது.

இந்த வழக்கில் ஜூலை 23ஆம் தேதியிலிருந்து  இருவரும் அமலாக்கத் துறை காவலில் இருந்து வந்தனர்.

அவர்களது காவல் முடிந்த நிலையில் கொல்கத்தாவில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டதையடுத்து,  நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்கு வங்க அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள், இதர ஊழியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், சட்விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் பார்த்தா சட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அர்பிதாவுக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.49.80 கோடி ரொக்கப் பணம், நகை, தங்கக் கட்டிகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

வாக்கு எண்ணும் மையங்களில் காவல் ஆணையா் ஆய்வு

அரசமைப்பை மாற்றும் பாஜகவின் முயற்சிகளை ‘இந்தியா’ கூட்டணி தகா்க்கும்: ராகுல் காந்தி

எலான் மஸ்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT