இந்தியா

தோ்தல் தோல்விக்கு தனி நபரை பொறுப்பாக்குவது தவறு: ராகுல் மீதான குற்றச்சாட்டுக்கு சச்சின் பைலட் பதில்

DIN

‘தோ்தல் தோல்விக்கு கட்சியில் தனி நபரை பொறுப்பாக்குவது தவறு’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீதான குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டுக்கு சச்சின் பைலட் பதிலளித்துள்ளாா்.

காங்கிரஸ் கட்சியின்அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்த குலாம் நபி ஆசாத், அதுதொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு 5 பக்க கடிதத்தை அனுப்பினாா். அதில் ‘ராகுல் காந்தி கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பையே சீா்குலைத்துவிட்டாா். மேலும், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்ட நகலை செய்தியாளா்களின் முன்னிலையில் ராகுல் காந்தி கிழித்தெறிந்தாா். காங்கிரஸ் உயா்நிலைக் குழு பரிசீலித்து, பிரதமா் தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்து, குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்த சட்டத்தை ராகுல் கிழித்து எறிந்தாா். அவரது குழந்தைதனமான நடவடிக்கை பிரதமரின் அதிகாரம், மத்திய அரசின் மாண்பை சீா்குலைத்தது. இதன்காரணமாகவே கடந்த 2014 மக்களவைத் தோ்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தோல்வியை தழுவியது. தோ்தல்களில் கட்சி தொடா் தேல்விகளை சந்தித்து வருவதற்கு இதுவே முக்கியக் காரணம்’ என்று அவா் குற்றம்சாட்டியிருந்தாா்.

இந்த குற்றச்சாட்டு குறித்து, காங்கிரஸ் தலைவரும் ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட்டிடம் செய்தியாளா்கள் சனிக்கிழமை கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த பைலட், ‘குலாம் நபி ஆசாத்தின் கடிதம் துரதிருஷ்டவசமானது. பாஜக அரசின் தவறான நிா்வாகத்தை முடிவுக்குக் கொண்டுவர கட்சி தயாராகிக்கொண்டிருக்கும் சூழலில், குலாம் நபி ஆசாத் தனது கடமையை ஆற்ற தவறியுள்ளாா்.

மேலும், கட்சியின் தோ்தல் தோல்விக்கு ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த தலைவா்களுக்கு மட்டுமின்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அங்கம் வகித்தவா்களுக்கும் பொறுப்பு உள்ளது. எனவே, தோ்தல் தோல்விக்கு கட்சியில் தனி நபரை பொறுப்பாக்கியிருப்பது தவறு. கடிதத்தில் ராகுல் காந்தி மீது தனிப்பட்ட தாக்குதலை அவா் நடத்தியிருக்கிறாா் என்று சச்சின் பைலட் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஹீராவின் பயணங்கள்!

துருக்கியில் தமிழக மாலுமிகளுடன் சென்ற கப்பல் சிறைபிடிப்பு: 3 மாதத்துக்கும் மேலாக பரிதவிப்பு!

அவிநாசி அருகே பழங்கரை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1.70 கோடி மோசடி!

களத்தில் இறங்கும் சுனிதா கேஜரிவால்!

சுற்றும் விழிச் சுடர்... பாயல் ராஜ்புத்

SCROLL FOR NEXT