இந்தியா

ஓடிடி தளம் ஒழுங்குபடுத்தப்படும்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

DIN

ஓடிடி தளம் எளிய முறையில் ஒழுங்குபடுத்தப்படும் என மத்திய தகவல்தொடர்பு- தொலைத்தொடர்பு மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

தில்லியில் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் வெளியாகும் "தில்லி டயலாக்ஸ்' பதிப்பு வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்று, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழும செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது தொலைத்தொடர்பு வரைவு மசோதா, தன்மறைப்பு சட்டங்கள், ரயில்வே துறை சந்திக்கும் சவால்கள், புல்லட் ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

கே: கருத்துச் சுதந்திரம், ஓடிடி தளத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து பரவலாக விவாதம் நடைபெறுகிறது. இந்த இரண்டுக்கும் எவ்வாறு தீர்வு காணலாம்?
பதில்: தகவல்தொடர்பு ஓடிடி தளத்தை நாங்கள் ஒழுங்குபடுத்துவோம். எளிய முறையில் ஓடிடி தளம் ஒழுங்குபடுத்தப்படும். இதன் நோக்கமே பயனாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுதான்.
இன்றைக்கு ஓடிடி தளத்தைப் பயன்படுத்தித்தான் பெரும்பாலான மோசடிகள் அரங்கேறுகின்றன. வங்கிக் கணக்கில் தனது சொத்தாக வெறும் ரூ.30,000 மட்டுமே வைத்திருக்கும் ஓர் ஏழை, தவறுதலாக ஓடிபி-ஐ (ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்) பகிர்வதால் எதிர்கொள்ளும் இன்னல்களை சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆகையால், சிக்கல் நிறைந்த இந்த இணைய உலகில், பயனாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இன்றியமையாதது.

கே: உரிமம் ஒழுங்கமைப்பின்கீழ் தாங்கள் கொண்டுவரப்பட்டால், அது ஓடிடி சூழலையே சிதைத்துவிடும் என ஓடிடி நிறுவனங்கள் கூறுகின்றனவே?
பதில்: அவற்றுக்கு உரிமம் கட்டாயமாக்கப்படும் என நீங்கள் ஏன் ஊகிக்கிறீர்கள்? ஒழுங்குபடுத்துவது என்றால், உரிமம் என அர்த்தமல்ல. பயனாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அடிப்படையில் சில எல்லைகளை வரையறுக்கிறோம்.

கே: அப்படியென்றால், இதை மிதமான அளவிலான கட்டுப்பாடு என கூறலாமா?
பதில்: ஆம், எளிய முறையில் ஓடிடி தளம் ஒழுங்குபடுத்தப்படும்.

கே: புதிய தொலைத்தொடர்பு மசோதாவானது தனி நபர்களின் தன்மறைப்பு உரிமையை மீறுவதாக சமுதாயத்தில் அச்சம் நிலவுகிறதே?
பதில்: இப்படியான அச்சம் தேவையில்லை. தரவுப் பாதுகாப்பு மசோதாவுடன் சேர்த்து தொலைத்தொடர்பு மசோதாவையும் படித்துப்பார்த்தால், தன்மறைப்பு உரிமை முற்றிலும் பாதுகாக்கப்பட்டிருப்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

கே: டிஜிட்டல் பண வடிவில் தொகையைச் செலுத்தினால், நமது தன்மறைப்பு உரிமை சமரசப்படுத்தப்படுகிறது என்று அர்த்தம் கொள்ளலாமா?
பதில்: இதில் தன்மறைப்பு உரிமை முற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

கே: எளிமையான முறை சார்ந்த ஒழுங்குபடுத்துதலின் பின்னணியில், பயனாளிகள் பாதுகாப்பை விவரிக்க முடியுமா?
பதில்: நீங்கள் மிகவும் முக்கியமான பணியை செய்து கொண்டிருக்கும்போது, உங்களுக்கு கைப்பேசியில் அழைப்பு வருகிறது என்றால், அழைப்பது யார் என்பதை அறிந்துகொள்ளவும், அழைப்பை ஏற்பதா என்கிற உரிமையும் உங்களுக்கு இல்லையா?
அந்த வகையில், யார் அழைப்பது, யார் குறுந்தகவல் அனுப்பியது என்ற தகவலை பயனாளிகள் அறியும் வகையில், அவரை பாதுகாப்பதுதான் நமது இலகு முறையிலான ஒழுங்கமைப்பின் நோக்கம்.

கே: புல்லட் ரயில் திட்டம் இந்தியாவில் எப்போது நடைமுறைக்கு வரும்?
 பதில்: புல்லட் ரயில் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது. இதற்கான வடிவமைப்புப் பணி முடிந்துவிட்டது. 112 கி.மீ. தொலைவுக்கு தூண் அமைக்கும் பணியும் நிறைவடைந்துவிட்டது. வரும் 2026-க்குள் முதலாவது புல்லட் ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கே: ஹைப்பர்லூப் (அதிவேக போக்குவரத்து) ரயில் திட்டம் பரிசீலனையில் உள்ளதா?
பதில்: ரயில்வே, ஐஐடி-சென்னையுடன் இணைந்து இதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறது. இந்த குழு திறமையான இளம்பொறியாளர்களைக் கொண்டது. இது மிகவும் சிக்கலான தொழில்நுட்பமாகும். உள்ளேயிருக்கும் ஷெல் (போட்) காந்தப்புலங்களுடன் நகரும். இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை உருவாக்க 5-6 ஆண்டுகள் ஆகும்.

கே: தரவு பாதுகாப்பு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியை அரசு நியமிக்கும்போது, அவரது நியமனம் எந்தளவிற்கு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்?
பதில்: ஆர்பிஐ, செபி, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம்  ஆகியவற்றின் தலைவர்களை அரசு தான் நியமிக்கிறது. இந்த அமைப்புகள் மிகவும் சுதந்திரமானவை. இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகளை கூற முடியும்.

கே: இந்தியாவில் உள்ள பாரதி (ஏர்டெல்), ஜியோ போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு கருவிகளை இறக்குமதி செய்து வருகின்றனவே? இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து உபகரணங்களை வாங்குவதை கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளீர்களா?
பதில்: தற்சார்பு இந்தியா பயண நடைமுறை 2020 -இல் தொடங்கியது. நாட்டில் இந்தச் சூழலை இரண்டு ஆண்டுகளில் உருவாக்கியிருப்பது ஒரு பெரிய சாதனையாகும். தொலைத்தொடர்பு உபகரணங்களின் உற்பத்தியை எல்லா வகையிலும் நாங்கள் ஆதரிக்கிறோம்.

கே: நீங்கள் அந்த நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீர்களா?
பதில்: தொலைத்தொடர்பு உபகரண உற்பத்தியாளர்களின் 42 தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினோம். இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏன்,  20 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நமது உற்பத்தியாளர்களிடமிருந்து உபகரணங்களை வாங்கும் அளவுக்கு தற்போதுள்ள அமைப்பை வலுவாக்க முடியும்.

கே: பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புத்துயிர் கொடுக்க நீங்கள் நிறைய பணம் செலவழித்துள்ளீர்கள். இதன் பின்னணி என்ன?
பதில்: பிஎஸ்என்எல் லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளால் அது நஷ்டத்தை அடையும் நிறுவனமாக மாறியது. இதனால், 2019 -ஆம் ஆண்டில், முதல்கட்டமாக ரூ.70,000 கோடி பிஎஸ்என்எல்-க்கு வழங்கப்பட்டது. இது பிஎஸ்என்எல் நிறுவனத்தை புத்துயிரூட்டி, புதிய நோக்கத்தைக் கொண்டு வந்தது.
2020-21இல், பிஎஸ்என்எல் செயல்பாட்டில் லாபத்தை பதிவு செய்தது. இப்போது, அந்த நிறுவனம் ஸ்திரத் தன்மையை அடைந்து, மேலும் வளர்ச்சியை நோக்கிச் செல்ல தயாராகி உள்ளது. பிஎஸ்என்எல்-இல் கடந்த மே மாதம் உள்நாட்டு தொழில்நுட்பம் சோதித்துப் பார்க்கப்பட்டது. ஆரம்பத்தில் ஒரே நேரத்தில் 10 லட்சம் அழைப்புகளுக்கும், பிறகு 50 லட்சம் அழைப்புகளை ஒரே நேரத்தில் பெறுவதற்கான தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருக்கும்.

கே: மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்க ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறதா?
பதில்: அனைத்துப் பயணிகளும் சுமார் 55 சதவீதம் சலுகை பெறுகின்றனர். ரயில் பயணச் சேவை வழங்குவதற்கு ரூ.100 செலவாகும் என்றால், ரயில்வே கட்டணம் ரூ.45 மட்டுமே. கடந்த ஆண்டு ரயில்வே பயணிகள் சேவைக்கு வழங்கப்பட்ட மானியம் ரூ.62,000 கோடி. இது பல மாநிலங்களின் நிதி நிலையைவிட அதிகம்.
 
கே: சரக்கு ரயில்களை மேலும் இயக்க திட்டம் உள்ளதா?
பதில்: சரக்கு போக்குவரத்தில் உள்கட்டமைப்பு பெரும் தடையாக உள்ளது. கடந்தாண்டு, ரயில்வே மூலம் கூடுதலாக 18,400 கோடி டன் சரக்கு போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முதல் தடவையாக நடந்துள்ள சாதனை.
2014-க்கு முன் இந்த அளவிலான நெட்வொர்க்குக்கு சுமார் ரூ.40,000 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டது. பிரதமர் மோடி இதை 3 மடங்காக உயர்த்தியுள்ளார். நிகழாண்டில் நாளொன்றுக்கு 12 கி.மீ. தொலைவு வரை புதிய பாதைகளை நிறைவு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி ஆட்சியில் ரயிலில் செல்வதே தண்டனை: ராகுல் காந்தி

கருப்பு நிலா- ரச்சிதா மகாலட்சுமி

விசாரணைக் கைதி மரணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

2027-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா ஜொலிக்கும்: ஜெ.பி.நட்டா

அழகென்றால்....ஐஸ்வர்யா மேனன்

SCROLL FOR NEXT