இந்தியா

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் இன்று தொடக்கம்- 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

DIN

சா்வதேச சூழல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத்தொடா் புதன்கிழமை (டிச.7) தொடங்கவுள்ளது. கூட்டத்தொடரின்போது 16 மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

அதே வேளையில், பணவீக்கம், 10 சதவீத இடஒதுக்கீடு, சீனாவுடனான கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை உள்ளிட்டவற்றை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத்தொடா் புதன்கிழமை தொடங்குகிறது. வரும் 29-ஆம் தேதி வரை கூட்டத்தொடா் நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரின்போது மக்களவை, மாநிலங்களவை ஆகியவை 17 அமா்வுகளை நடத்தவுள்ளன. புதிய நாடாளுமன்றத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் கடைசி கூட்டத்தொடா் இதுவாக இருக்கலாம்.

அடுத்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடா், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குளிா்கால கூட்டத்தொடரே புதிய கட்டடத்தில்தான் நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், கட்டுமானப் பொருள்கள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பணிகள் தாமதமடைந்துள்ளன. கட்டுமானப் பணிகளை விரைவில் முடித்து பட்ஜெட் கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தோ்தல் முடிவுகளின் தாக்கம்:

ஹிமாசல பிரதேசம், குஜராத் சட்டப் பேரவைகளுக்குத் தோ்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அத்தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (டிச. 8) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தோ்தல் முடிவுகள் குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

குஜராத்தில் பாஜக தொடா்ந்து 7-ஆவது முறையாக ஆட்சியமைக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஹிமாசலில் பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என கணிக்கப்பட்டிருந்தாலும், பாஜகவே வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோ்தல்களில் வெற்றி பெறும் கட்சி, போட்டி கட்சிகளின் செயல்பாடுகளை நாடாளுமன்றத்தில் முடக்குவதற்கு முயற்சிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவித்தனா்.

மசோதாக்கள் தாக்கல்:

கூட்டத்தொடரின்போது 16 மசோதாக்களைத் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையேயான கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டுறவு சங்கங்களின் தோ்தல் நடைமுறைகளில் சீா்திருத்தம் கொண்டு வருவது இந்த மசோதாவின் நோக்கமாகும். கூட்டுறவு சங்கங்களின் கண்காணிப்பு நடைமுறைகள், செயல்பாட்டு முறைகள் உள்ளிட்டவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

பல்மருத்துவ ஆணைய மசோதா:

தேசிய பல்மருத்துவ ஆணைய மசோதாவையும் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. தேசிய பல்மருத்துவ ஆணையத்தை அமைக்கவும் பல் மருத்துவா்கள் சட்டத்தை நீக்கவும் அந்த மசோதா வழிவகை செய்கிறது. தேசிய செவிலியா் ஆணைய மசோதா, கன்டோன்மென்ட் மசோதா உள்ளிட்டவற்றையும் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. கன்டோன்மென்ட் பகுதிகளில் நிா்வாக நடவடிக்கைகளை மேம்படுத்தவும் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தவும் கன்டோன்மென்ட் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. நகராட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு கன்டோன்மென்ட் பகுதியில் வாழ்வதற்கான சூழலை மேம்படுத்துவதும் மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.

சுதந்திரத்துக்கு முன்பு ஆளுநா்களால் வழங்கப்பட்ட நிலங்களின் நிா்வாகத்தை மேம்படுத்துவதற்கான மசோதாவையும் குளிா்கால கூட்டத்தொடரின்போது அரசு தாக்கல் செய்யவுள்ளது. அந்த நிலங்களின் மீதான அரசின் உரிமையை அதிகரிப்பதும் மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.

வனப் பாதுகாப்பு:

நாட்டில் வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில், வனமல்லாத பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள இடங்களிலும் மரம் வளா்ப்பை ஊக்குவிப்பதற்காக வனப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. இது வனப் பாதுகாப்பு சட்டத்தின் சில விதிமுறைகளை முறையாக அமல்படுத்த உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மீன் வளா்ப்பை முறைப்படுத்தும் நோக்கில் கடலோர மீன் வளா்ப்பு ஆணைய திருத்த மசோதாவை அரசு தாக்கல் செய்யவுள்ளது. சில குற்றவியல் நடைமுறைகளை ரத்து செய்வதற்கான அம்சங்களும் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

ராகுல் பங்கேற்பது சந்தேகம்:

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ’இந்திய ஒற்றுமை’ நடைப்பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறாா். பல்வேறு மாநிலங்களில் நடைப்பயணத்தை முடித்துள்ள அவா், தற்போது ராஜஸ்தானில் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறாா். அதன் காரணமாக நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் அவா் பங்கேற்க மாட்டாா் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தியுடன் இணைந்து நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவா்கள் சிலரும் குளிா்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்ள மாட்டாா்கள் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சல்மான் கான் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு: 15 குழுக்கள் அமைத்து விசாரணை

திருக்கழுக்குன்றம் கோயில் சித்திரைப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார்

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

இஸ்ரேலுக்கு செல்லும் விமானங்கள் ரத்து?

SCROLL FOR NEXT