பாட்னா: மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும் என்றால், பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ் குமார் கூறியதாவது, பெண்களுக்கு கல்வி கிடைக்கும் வரை, சட்டத்தை இயற்றுவதும் அதனை நடைமுறைப்படுத்துவது மட்டும் வெற்றியைத் தராது என்று குறிப்பிட்டார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியிருக்கும் நிலையில் நிதிஷ் குமார் இவ்வாறு கூறியுள்ளார்.
2012- 13ஆம் ஆண்டில் நாட்டில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்து மாநில அரசு ஒரு நீண்ட ஆய்வை மேற்கொண்டது. அப்போது மக்கள் தொகை வளர்ச்சி 4.3 விகிதமாக இருந்தது. ஆய்வின் அடிப்படையில், கொள்கைகளை வகுத்து, அதனை வெளியிட்டு, மக்கள் தொகைப் பெருக்கம் குறித்து மாநில மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். அதன் எதிரொலியாக, மாநிலத்தில் மக்கள் தொகைப் பெருக்கம் 3 சதவீதமாகக் குறைந்தது என்றார்.
இந்த ஆய்வின் போது, கணவன் - மனைவி இருவரும் 10ஆம் வகுப்புக்கு மேல் படித்தவர்களைக் கொண்ட நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி 2 சதவீதமாக உள்ளது. பிகாரிலும் இது 2 சதவீதமாக உள்ளது. அதே வேளையில் பெண்கள் 12ஆம் வகுப்புக்கு மேல் படித்திருந்தால் அங்கு அதை விட குறைவாகவே மக்கள் தொகை வளர்ச்சி உள்ளது. இது எங்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டுதலைக் கொடுத்தது என்கிறார்.
எனவே, பெண் கல்வியில் நாம் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சீனாவையே எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு ஒரு குழந்தைதான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றினார்கள். பிறகு அதனை திரும்பப் பெற்றுக் கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.