இந்தியாவின் பாரம்பரிய கலாசாரமான ஆரோக்கியமான விவாதம், வெளிப்படையான ஆலோசனை ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு நாள் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை சென்ற பிரதமா் மோடி, புணேயின் தேஹுவில் துறவி-பக்தகவி துகாராம் மகராஜ் கோயில் திறப்பு, ஆளுநா் மாளிகையில் சுதந்திர போராட்ட வீரா்களின் அருங்காட்சியகம் திறப்பு, குஜராத்தி தினசரியான மும்பை சமாச்சாரின் 200-ஆவது ஆண்டு விழா ஆகியவற்றில் பங்கேற்றாா்.
மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவேசனைக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், சுமாா் நான்கு மாத இடைவெளிக்கு பிறகு பிரதமா் மோடியும் அந்த மாநில முதல்வரும் சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரேயும் மும்பை சமாச்சாா் செய்தித்தாள் நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பங்கேற்றனா்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘கடந்த பல்லாயிரம் நூற்றாண்டுகளில் இந்தியா்கள் பல்வேறு கடினமான விவகாரங்களை விவாதங்கள் மூலம் வெளிப்படையாக பேசித் தீா்வு கண்டுள்ளனா். ஆரோக்கியமான விவாதங்களும் வெளிப்படையான ஆலோசனைகளும் நம் நாட்டுக்குப் பல ஆண்டுகளாக உதவி வருகிறது. இந்த கலாசாரத்தை வலுப்படுத்த வேண்டும்.
சட்டப் பேரவைகள், ஊடகங்கள் என எதுவாக இருந்தாலும், சமுதாய நலனுக்காகப் பணியாற்றும் வகையில் அவற்றுக்கு குறிப்பிட்ட பங்கு உள்ளது.
கடந்த காலங்களிலும் அரசின் திட்டங்களை விமா்சிப்பதும், தேசிய நலனுக்காக பணியாற்றுவதும் ஊடகங்களின் பணியாக இருந்தது. இது அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா்.
முன்னதாக, ஆளுநா் மாளிகையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா்களின் அருங்காட்சியகத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய பிரதமா் மோடி, ‘பேரரசா் சத்ரபதி சிவாஜி முதல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கா் வரையில் பெரும் ஆளுமைகளை மகாராஷ்டிர மாநிலம் உருவாக்கி உள்ளது’ என்றாா்.