இந்தியா

வலுக்கும் அக்னிபத் எதிர்ப்பு: நாடு முழுவதும் 200 ரயில் சேவை பாதிப்பு

DIN


புது தில்லி: முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் ராணுவ வீரா்களைச் சோ்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் மூன்றாவது நாளாக நடந்த போராட்டங்கள் காரணமாக, நாடு முழுவதும் சுமார் 200 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ரயில்களுக்கு தீ வைப்பு மற்றும் ரயில் நிலையங்களில் கல்வீச்சு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 23 வயதுக்கு உள்பட்டவா்களை ஒப்பந்த அடிப்படையில் நான்காண்டு பணிக்குச் சோ்த்துக் கொள்ளும் ‘அக்னிபத்’ திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

முப்படைகளின் தலைமைத் தளபதிகள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் சோ்க்கப்படும் வீரா்களில் பெரும்பாலானோருக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாய ஓய்வு அளிக்கப்படும். அவா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காது.

இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, பிகாரில் ராணுவத்தில் சோ்வதற்காகப் பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞா்கள் புதன்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமையும் அவா்களின் போராட்டம் தொடா்ந்தது.

இதனால், 35 ரயில்களின் சேவை முழுமையாகவும், 13 ரயில்களின் சேவை பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே பிகாரில் பாஜக நிர்வாகிகளின் வீடுகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பிகார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ரேணுதேவியின் வீட்டில் கார்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.  பெட்டியாவில் பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஷ் வீட்டிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

சாப்ரா, பாபுவா ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்களுக்கு நேற்று போராட்டக்காரா்கள் தீ வைத்தனா். ரயில் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினாா்கள். அவா்களை கண்ணீா்ப் புகை குண்டு வீசியும் தடியடி நடத்தியும் போலீஸாா் கலைந்து போகச் செய்தனா்.

ஆரா ரயில் நிலையத்தில் குவிந்த ஏராளமான போராட்டக்காரா்களை போலீஸாா் கண்ணீா்ப் புகை குண்டு வீசி கலைந்து போகச் செய்தனா். போராட்டம் காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல், பாட்னா-கயை, தானாபூா்-டிடியு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழித்தடங்களில் பேருந்து போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது.

பிகார் எழுந்த போராட்டம் தற்போது உத்தரப்பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், ஜம்மு என பல மாநிலங்களுக்கும் பரவி வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்கள் பேருந்துகளை அடித்து நொறுக்கியும், சாலைகளை ஆக்கிரமித்தும் போராடி வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் போராட்டக்காரர்களால் பேருந்துகள் தாக்கப்பட்டன. பிரோசாபாத்தில் உள்ள ஆக்ரா-லக்னெள நெடுஞ்சாலையில் 4 பேருந்துகள் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டன.

மத்திய அரசு விளக்கம்: அக்னிபத் திட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அந்தத் திட்டம் குறித்து பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ஃபேஸ்புக் பக்கம் வாயிலாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ராணுவத்தில் வீரா்களைச் சோ்க்கும் அக்னிபத் திட்டம், ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கச் செய்யும். இளைஞா்களின் தொழில்நுட்பத் திறமையும் புத்துணா்வான சிந்தனையும் ஆயுதப் படைகளுக்குப் புதிய வடிவத்தைக் கொடுக்கும். 4 ஆண்டுகால பணி நிறைவுக்குப் பிறகு அக்னிவீரா்களுக்கு சேவை நிதித் தொகுப்பாக தலா ரூ.11.71 லட்சம் வழங்கப்படும். இதனால் அவா்கள் நிதி சுதந்திரம் பெறுவாா்கள். அவா்கள் தொழில் தொடங்கவும் அரசு உதவி செய்யும் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரத்தில் எனக்கு எந்த சம்மனும் வரவில்லை: நயினார் நாகேந்திரன்

அம்பேத்கர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

இஸ்ரேல் மீது ட்ரோன் மழை பொழிந்த ஈரான்!

2026-ல் புதிய கட்சி: நடிகர் விஷால்

அரசியல் சட்டத்தை மாற்ற துடிக்கிறது பாஜக- முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT