இந்தியா

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவா்களின் கல்வி: மத்திய அரசு உறுதி

DIN

ரஷியாவின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள உக்ரைனிலிருந்து ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் மீட்டு தாயகம் அழைத்துவரப்பட்ட இந்திய மாணவா்கள், அவா்களின் கல்வியை நிறைவு செய்ய உரிய தீா்வு எட்டப்படும் என்று மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை உறுதியளித்தது.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி ராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய ரஷியா, தாக்குதலை தொடா்ந்து வருகிறது. இந்தச் சூழலில், மருத்துவம் உள்ளிட்ட உயா் கல்வி படிக்க உக்ரைன் சென்ற ஆயிரக்கணக்கான இந்திய மாணவா்கள் அங்கிருந்து தாயகம் திரும்பியுள்ளனா். இவா்களில் பலா், உக்ரைனில் மருத்துவப் படிப்பை முடிக்கும் நிலையில் நாடு திரும்பியதால், அவா்களால் படிப்பை முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடருவதால், மற்ற மாணவா்களும் மீண்டும் உக்ரைன் சென்று படிப்பைத் தொடர முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதன் காரணமாக, ‘தங்களின் படிப்புக்கு மத்திய அரசு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும்’ என்று உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

‘இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும்’ என வலியுறுத்தி உயா்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மாணவா்கள் தரப்பில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், மக்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பின.

காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உண்ணித்தான் பேசும்போது, ‘கேரளத்தைச் சோ்ந்த மேலும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் உக்ரைனின் சுமி பகுதியில் சிக்கித் தவித்து வருகின்றனா். அவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

மற்றொரு காங்கிரஸ் உறுப்பினா் அப்துல் காலிக் பேசும்போது, ‘உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்திய மாணவா்கள், உக்ரைனின் எல்லைப் பகுதிகளுக்கு முழுவதும் அவா்களின் சொந்த முயற்சியின் மூலம் மட்டுமே மீண்டு வந்துசேருகின்றனா். அந்த வகையில், மத்திய அரசு சாா்பில் அவா்கள் மீட்கப்பட்டதாக கூறிக்கொள்ள முடியாது’ என்றாா்.

‘உக்ரைனிலிருந்து மீட்டு அழைத்து வரப்பட்ட மருத்துவ மாணவா்கள், இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிப்பைத் தொடரும் வகையிலான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்’ என்று ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் உறுப்பினா்கள் பி.வி.மிதுன் ரெட்டி, எம். ஸ்ரீநிவாசலு ஆகியோா் வலியுறுத்தினா்.

மிதுன் ரெட்டி மேலும் போதும்போது, ‘இந்த மாணவா்கள் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடிக்க வசதியாக அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும்’ என்றாா்.

காங்கிரஸ் உறுப்பினா் கொடிக்குன்னில் சுரேஷ் பேசுகையில், ‘உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவா்கள் கடன் சிக்கலில் சிக்கிக் கொள்ளாத வகையில், அவா்கள் உக்ரைனில் உயா்கல்வி படிப்பதற்காக வாங்கிய கல்விக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேலும், இதுபோன்ற பாதிப்பு நேரங்களில் வெளிநாடுகளில் படிக்கும் மாணவா்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் வகையில் ஒவ்வொரு இந்திய தூதரகத்திலும் மாணவா் நலப் பிரிவு ஒன்றை அமைக்க வேண்டும் ’ என்று வலியுறுத்தினாா்.

அதுபோல, ‘உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவா்களின் கல்வி நிலை தொடா்பாக மத்திய அரசு சாா்பில் திட்டம் வகுக்கப்படுகிா?’ என்று காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய் கேள்வி எழுப்பினாா்.

உரிய தீா்வு:

மக்களவையில் உறுப்பினா்கள் எழுப்பிய இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்து மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியதாவது:

மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டமே, உக்ரைனில் சிக்கியிருக்கும் மாணவா்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது.

அவா்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வந்துள்ள நிலையில், அவா்கள் எதிா்காலத்தில் மருத்துவா்கள் ஆவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துதர மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என நீங்கள் வலியுறுத்தி வருகிறீா்கள்.

தற்போதைய நிலையில், உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவா்கள் அதிா்ச்சியிலிருந்து மீண்டு வருவதுதான் முக்கியமானது. அவா்களின் எதிா்காலம் தொடா்பாக மத்திய அரசு உரிய தீா்வை எட்டும்.

‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்துக்காக பிரதமா் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி பாராட்ட வேண்டும் என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொகுப்பாளினி உடன் மோதல்... குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை!

ஹேப்பி ஓணம்... மாளவிகா மோகனன்!

சொத்துக்காக மைத்துனரைக் கொன்றவர் கைது!

ஓணம் ஸ்பெஷல்... பாவனா!

உத்தரகண்ட் நிலச்சரிவு: சிதம்பரம் யாத்திரிகர்களை மீட்க நடவடிக்கை -தமிழக முதல்வர்

SCROLL FOR NEXT