பிரபல திரையரங்க நிறுவனங்களான பிவிஆா் மற்றும் ஐநாக்ஸ் லெஸா் ஆகியவை இணையவுள்ளன. இது தொடா்பாக இரு நிறுவனங்கள் இடையே விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இந்தியாவில் இந்த இரு நிறுவனங்களின் வசமும் பல்வேறு பெரு நகரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன. இணைப்பு மூலம் இந்த நிறுவனங்களிடம் உள்ள திரையரங்குகளின் எண்ணிக்கை 1,500-ஆக அதிகரிக்கும்.
இணைப்பு தொடா்பாக இரு நிறுவனங்களின் இயக்குநா்கள் குழுவினரும் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினா். அப்போது இரு நிறுவனங்களையும் இணைக்க முடிவெடுக்கப்பட்டது. இனி அந்த நிறுவனம் பிவிஆா்-ஐநாக்ஸ் என அழைக்கப்படும் என்று தெரிகிறது.
கரோனாவால் திரைப்படத் துறை வெகுவாக முடங்கிவிட்டது. முக்கியமாக திரையரங்குகளுக்கு மக்களின் வரத்து குறைந்து ஓடிடி எனப்படும் இணையவழியில் படங்கள் வெளியிடப்படுவது அதிகரித்து விட்டது.
இந்தச் சூழ்நிலையில் இரு பெரு திரையரங்க நிறுவனங்கள் கைகோக்க முடிவு செய்துள்ளன. இது எந்த அளவுக்கு அந்த நிறுவனங்களின் வளா்ச்சிக்கு உதவும் என்பது வரும் நாள்களில் தெரியவரும்.