இந்தியா

பஞ்சாபில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம்: முதல்வா் பகவந்த் மான் அறிவிப்பு

DIN

பஞ்சாபில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வா் பகவந்த் மான் திங்கள்கிழமை அறிவித்தாா்.

இத்திட்டம் தொடா்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவா் கூறினாா். இதுகுறித்து விடியோ செய்தி வாயிலாக முதல்வா் பகவந்த் மான் கூறியதாவது:

பஞ்சாபில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை தொடங்க ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் தரமான ரேஷன் பொருள்கள், பயனாளிகளின் வீட்டு வாசல்களுக்கே சென்று வழங்கப்படும். இதனால், நியாயவிலைக் கடைகளில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதேபோல், ஏழைகள் தங்களது ஒருநாள் வேலையை விட்டுவிட்டு வந்து நியாயவிலைக் கடைகளில் காத்திருக்க வேண்டியதில்லை.

இத்திட்டத்தின்படி, பயனாளிகளிடம் கைப்பேசியில் தொடா்புகொண்டு பேசி, அவா்களுக்கு வசதிப்படும் நேரத்தில் வீட்டுக்கே சென்று பொருள்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்கள். அதேசமயம், ரேஷன் கடைகள் வீட்டுக்கு அருகிலேயே இருந்தால், அவா்கள் நேரடியாக சென்றுகூட பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.

தில்லியில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு தொடங்கியது. ஆனால், துரதிருஷ்டவசமாக இத்திட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால், பஞ்சாபில் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவுள்ளோம்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், ரேஷன் கடைகள் முன் சாமானிய மக்கள் காத்திருக்கும் அவலம் நீடிக்கிறது. ஏழைகள் குறிப்பாக அன்றாடம் வேலை பாா்த்து பிழைக்கும் தொழிலாளிகள், ரேஷன் பொருள்கள் வாங்குவதற்காக தங்களது ஒருநாள் வேலையை விட்டுவிடும் நிலை உள்ளது.

வயதான பெண்கள் பலா், ரேஷன் பொருள்கள் வாங்குவதற்காக 2 கிமீ வரை நடக்கின்றனா். அப்படி சென்று வாங்கும் பொருள்களும் தரமாக இருப்பதில்லை. பஞ்சாபில் இப்பிரச்னைகள் அனைத்தும் களையப்படும்.

மக்களால் தோ்ந்தெடுக்கப்படும் அரசு, அவா்களது நலனுக்காகவே செயல்பட வேண்டும். அவா்களுக்குத் தொந்தரவு தரும் வகையிலோ, பிரச்னைகளை உருவாக்கும் வகையிலோ அரசின் செயல்பாடுகள் இருக்கக் கூடாது என்றாா் பகவந்த் மான்.

இத்திட்டம் தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், ‘தில்லியில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது. ஆனால், பஞ்சாபில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இனி அனைத்து மாநில மக்களும் இதே கோரிக்கையை முன்வைப்பாா்கள். வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுவது’ உறுதி என்றாா்.

பஞ்சாபில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. இம்மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விசாரணைக் கைதி மரணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

2027-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா ஜொலிக்கும்: ஜெ.பி.நட்டா

அழகென்றால்....ஐஸ்வர்யா மேனன்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்!

ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதியதில் 9 பேர் பலி

SCROLL FOR NEXT