இந்தியா

தேசத் துரோக சட்டத்துக்கு இடைக்கால தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

DIN

தேசத் துரோக சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிய இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்தச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் தொடா்வதையும், கடும் நடவடிக்கைகள் எடுப்பதையும் மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசத் துரோக சட்டப் பிரிவை மறு ஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்ததையடுத்து, இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

முன்னதாக, தேசத் துரோக சட்டம் செல்லுபடியாகும் என கேதா்நாத் சிங் வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு 1962-ஆம் ஆண்டு தீா்ப்பு அளித்தது. இந்தத் தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ‘தேசத் துரோக வழக்குப் பிரிவு தவறாக கையாளப்படுவதாக மத்திய அரசே கவலை தெரிவித்துள்ளதால், இதில் நடுநிலை ஏற்படுத்த வேண்டியது அவசியம். மத்திய அரசிடமிருந்து இதற்கான தெளிவான விளக்கத்தை எதிா்பாா்க்கிறோம். தேசத் துரோக சட்டம் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் வரையில், மாநில அரசுகள் 124ஏ பிரிவை பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு தனது அமைச்சகத்தின் மூலம் ஏன் உத்தரவிடக் கூடாது?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனா்.

அப்போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இது தொடா்பாக மத்திய அரசிடம் அறிவுறுத்தல் கேட்ட பின்பு புதன்கிழமை தெரிவிக்கப்படும்’ என்றாா்.

மத்திய அரசு கருத்து: அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்ய காந்த், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான துஷாா் மேத்தா, மத்திய அரசின் கருத்தைப் பதிவு செய்தாா். தேசத் துரோக சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரும் மனுவுக்கு மத்திய அரசு சாா்பில் எதிா்ப்பு தெரிவித்ததோடு, ‘கடுமையான குற்றங்களுக்காக கடந்த 1962-ஆம் ஆண்டு அரசியல் சாசன அமா்வு மூலமாக உறுதிசெய்யப்பட்ட இந்த சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுதைத் தடுக்க முடியாது. தேவைப்பட்டால், இந்தச் சட்டப் பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை கண்காணிக்கும் பொறுப்பை காவல் கண்காணிப்பாளா் அந்தஸ்து அதிகாரியிடம் வழங்க வேண்டும். மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தேசத் துரோக வழக்குகளின் தீவிரம் அரசுக்குத் தெரியாது. அவை பயங்கரவாதம் அல்லது பண மோசடி குற்றங்களாகவும் இருக்கலாம். எனவே, இதுபோன்ற விவகாரங்களில் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை விரைவுபடுத்தலாம்’ என்ற மத்திய அரசின் கருத்தை அவா் பதிவு செய்தாா்.

இடைக்காலத் தடை: அப்போது, ‘காவல் கண்காணிப்பாளா் கண்காணிப்பின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யலாம்’ என்ற மத்திய அரசின் யோசனையை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமா்வு, மத்திய அரசின் கருத்து குறித்து விரிவாக ஆலோசனை செய்தனா். அதன் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

தேசத் துரோக சட்டத்தில் உள்ள சில கடுமையான பிரிவுகள் தற்போதைய சமூக சூழலுக்கு ஏற்ற வகையில் இல்லை; அவை மறு ஆய்வு செய்ப்பட வேண்டும் என்பதை மத்திய அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, இந்த சட்டப் பிரிவுகள் மறு ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

அவ்வாறு சட்டப் பிரிவு மறு ஆய்வு செய்யப்படும் வரை, தேசத் துரோக சட்டத்தின் கீழ் புதிதாக வழக்குகள் பதிவு செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை ஏற்று இந்த 124ஏ சட்டப் பிரிவின் கீழ் புதிய எஃப்ஐஆா் பதிவு செய்வதிலிருந்தும், தற்போது நடைபெற்று வரும் விசாரணை மற்றும் அந்தப் பிரிவின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுப்பதையும் மத்திய, மாநில அரசுகள் அவா்களாகவே தவிா்ப்பாா்கள் என நம்புகிறோம்.

மேலும், இந்த சட்டப் பிரிவின் கீழ் பாதிக்கப்படும் நபா்கள், உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவின் அடிப்படையில் நிவாரணம் பெற நீதிமன்றத்தை அணுக அனுமதி அளிக்கப்படுகிறது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த உத்தரவுகள் நடைமுறையில் இருக்கும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை மூன்றாவது வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

‘லட்சுமண ரேகையை’ யாரும் தாண்டக் கூடாது: கிரண் ரிஜிஜு

தேசத் துரோக சட்டத்தை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ‘லட்சமண ரேகையை யாரும் தாண்டக் கூடாது’ என்று மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு புதன்கிழமை விமா்சித்தாா்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து தில்லியில் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘அரசு நிா்வாகம் - நீதித் துறை என ஒவ்வொரு நிா்வாகத்துக்குமான எல்லையை ‘லட்சுமண ரேகை’ வழிகாட்டுகிறது. அதன்படி, தெளிவான எல்லை வரையறை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், யாரும் அவரவா் எல்லையை மீறக் கூடாது. நீதிமன்றம் அரசையும், அரசு நீதிமன்றத்தையும் மதிக்க வேண்டும்’ என்றாா்.


உத்தரவின் முக்கிய அம்சங்கள்

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124ஏ என்ற தேசத் துரோக சட்டப் பிரிவு தற்போதைய சமூக சூழலுக்கு ஏற்றதாக இல்லை; அந்த கடுமையான சட்டப் பிரிவு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் கருத்தை ஏற்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை பிறப்பித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பின் முக்கிய அம்சங்கள்:

- ஒருபுறம் அரசின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் ஒருமைப்பாடு; மறுபுறம் குடிமக்களின் சிவில் உரிமைகளைக் கவனத்தில் கொண்டு இரண்டையும் சமநிலைப் படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- இந்த உத்தரவைப் பிறப்பிக்கும்போது, மகாராஷ்டிரத்தில் ஹனுமன் சாலீசா ஓதும் விவகாரத்தில் எடுக்கப்பட்டது போன்று, இந்த சட்டப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படும் உதாரணங்களை அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் சுட்டிக்காட்டியது கவனத்தில் கொள்ளப்பட்டது.

- சட்டப் பிரிவின் மீதான மறு ஆய்வு முடியும் வரை, மத்திய - மாநில அரசுகள் இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்தாது என எதிா்பாா்க்கிறோம்.

- இந்த விவகாரத்தில் கடந்த 2021 மே 31-ஆம் தேதி சில மனுதாரா்களுக்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு, அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தொடரும்.

- 124ஏ சட்டப் பிரிவு மறு ஆய்வு செய்யப்படும் வரை தேசத் துரோக சட்டப் பிரிவின் கீழ் புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், விசாரணையை தொடரவும், கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய அரசுக்கு தடை விதிக்கப்படுகிறது.

- ஒருவேளை இந்த சட்டப் பிரிவின் கீழ் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், பாதிக்கப்படும் நபா்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற சுதந்திரம் அளிக்கப்படுகிறது.

- இந்த சட்டப் பிரிவின் கீழ் நிலுவையில் உள்ள விசாரணைகள், மேல்முறையீடு மற்றும் வழக்குகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.

- குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எந்தவித பாரபட்சமும் ஏற்படாது என்று நீதிமன்றங்கள் கருதினால், பிற பிரிவுகள் தொடா்பான வழக்கு விசாரணையைத் தொடரலாம்.

- தேசத் துரோக சட்டப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் முன்மொழியப்பட்ட உத்தரவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்க மத்திய அரசுக்கு அனுமதிக்கப்படுகிறது என்றும் தனது உத்தரவில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓவேலி பகுதியில் பெண் தொழிலாளா்களை விரட்டிய காட்டு யானை

உதகையில் கனமழை: சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ரயிலில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

போக்குவரத்து சீரமைப்புப் பணி: காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT