இந்தியா

காங்கிரஸில் அரசியல் விவகாரக் குழு உள்பட 3 உயர்நிலைக் குழுக்கள்

தினமணி

புது தில்லி: கட்சியைப் பலப்படுத்தவும், வருகின்ற 2024 பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் காங்கிரஸில் 3 உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  உதய்பூர் சிந்தனை அமர்வில் உறுதியளிக்கப்பட்டதை நிறைவேற்றும் விதமாக கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஒப்புதலுடன் காங்கிரஸ் கட்சியின் (அமைப்பு)  பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செவ்வாய்க்கிழமை இதை அறிவித்துள்ளார். 
காங்கிரஸ் கட்சியில் கடந்த மார்ச் மாதம் ஒரு தரப்புத் தலைவர்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்திருந்தனர். இதில் காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த 23 தலைவர்கள் தனியாகக் கூட்டம் நடத்தி, கட்சித் தலைமைக்கு எதிராகவும் குரல் கொடுத்தனர். இவர்கள் ஜி-23 தலைவர்கள் என அழைக்கப்பட்டனர். இதுபோன்ற நெருக்கடிகளைத் தொடர்ந்து 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது.
இதையொட்டி, கட்சியின் எதிர்காலத் திட்டங்களுக்கு சமீபத்தில் உதய்பூரில் "புதிய உறுதிக்கான சிந்தனை அமர்வு' (நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்) என்ற 3 நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் இளைஞர்களைக் கவரும் விதமாக சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால், குறிப்பாக ஜி-23 தலைவர்களது கோரிக்கைகள் குறித்து அலசப்படவில்லை. அவர்களது கோரிக்கைகளில் ஒன்று முக்கிய முடிவுகளை எடுக்க காங்கிரஸ் கட்சியில் பாஜகவைப் போன்று ஆட்சி மன்றக் குழு அமைக்கப்படவேண்டும் என்பதாகும். இது காங்கிரஸ் கட்சி விதிகளில் இருப்பதாகும். காங்கிரஸ் கட்சியின் தலைவர்தான் கட்சியில் அதிகாரம் மிக்கவர் என்றாலும், தலைமை இந்த ஆட்சி மன்றக் குழுவின் யோசனைகளைக் கேட்டு செயல்படும் விதமாக முன்பு அமைக்கப்பட்டிருந்தது. நரசிம்மராவ் பொறுப்பேற்பதற்கு முன்பு வரை இந்த ஏற்பாடு செயல்பாட்டில் இருந்தது.
இந்த நிலையில், ஆட்சி மன்றக்  குழுவை மீண்டும் அமைக்க வேண்டும் என ஜி-23 தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், இந்தக் கோரிக்கைக்கு மாறாக உதய்பூர் கூட்டத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சிக்கு முன் இருக்கும் அரசியல் பிரச்னைகள், சவால்கள் ஆகியவை குறித்து விவாதிக்க ஒரு ஆலோசனைக் குழு ஏற்படுத்தப்பட்டு, அது தனது தலைமையின் கீழ் அவ்வப்போது கூடி முடிவெடுக்கும் என்றும், இந்தப் புதிய குழு  கூட்டு முடிவெடுக்கும் அமைப்பு அல்ல என்றும் அதே சமயத்தில் மூத்த தலைவர்கள் அடங்கிய இந்தக் குழு பரந்த அனுபவத்தைப் பெற எனக்கு உதவும் என்றும் அறிவித்தார்.
அரசியல் விவகாரக் குழு: அதன்படி, சோனியா காந்தி உள்ளிட்ட 9 பேரைக் கொண்ட அரசியல் விவகாரக் குழு அமைத்து கட்சித் தலைமை அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவில் பிரச்னைக்குரிய ஜி-23 தலைவர்களாகக் கருதப்படும் குலாம்நபி ஆஸாத், ஆனந்த் சர்மா போன்றவர்களோடு, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அம்பிகா சோனி, திக்விஜய் சிங், கே.சி.வேணுகோபால், ஜிதேந்தர சிங் (முன்னாள் மத்திய இணையமைச்சர்-ராஜஸ்தான்) போன்றோர் இடம் பெற்றுள்ளனர். 
8 பணிக் குழுக்கள்: மேலும், உதய்பூர் தீர்மானத்தின்படி கட்சியில் வருகின்ற 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கட்சியின் அமைப்புகளுக்கான மாற்றங்கள், புதிய நியமன விதிகள், ஊடகம், நவீன தகவல் தொடர்பு,  விளம்பரம், நிதி, கட்சி தொடர்பான பயிற்சி, தேர்தல் மேலாண்மை உள்ளிட்ட கட்சி அமைப்பின் அனைத்து அம்சங்களுக்கும் தனித்தனி பணிக் குழுவும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்களை கட்சிப் பதவிகளிலிருந்து விடுவிப்பது, பூத் கமிட்டியை பலப்படுத்தல் போன்றவை இந்தப் பணிக் குழுவில் முக்கியமானது. தற்போது பணிக் குழுவுக்கு 8 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெயராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மாக்கன், பிரியங்கா காந்தி, ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, சுனில் கனுகோலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில், சுனில் கனுகோலுவை தவிர மற்றவர்கள் காங்கிரஸில் நீண்ட நாள்கள் பொறுப்பில் இருந்தவர்கள். சுனில் கனுகோலு, பிரசாந்த் கிஷோரிடம் இருந்து, பின்னர் தனியாகச் சென்று பாஜக (உ.பி), அகாலிதளம், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் தேர்தல் மேலாண்மைகளில் ஈடுபட்டு பின்னர் காங்கிரஸில் சேர்ந்தவர்.  இந்த 8 பேர்  தலைமையிலான தனித் தனிக் பணிக் குழுகள் 2024-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை நோக்கி செயல்படவுள்ளது.
பாரத் ஜோடோ யாத்திரை: இவை தவிர கட்சி 9 பேரைக் கொண்ட மத்திய திட்டக் குழு ஒன்றையும் அறிவித்துள்ளது. இதில், திக்விஜய் சிங், சச்சின் பைலட், டாக்டர் சசிதரூர், ரவ்னீத் சிங் பிட்டு, ஜோதி மணி, பிரத்யுத் போர்டோலோய் ஆகிய எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கே.ஜே.ஜார்ஜ் (கர்நாடகம்), ஜிட்டு பட்வாரி (ம.பி.), எம்எல்சி சலீம் அகமது (கர்நாடகம்)  உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழு, கட்சியை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாகவும், மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொள்ளும் பாரத் ஜோடோ (இணைப்பு) யாத்திரைகளை ஒருங்கிணைக்கவும் இந்த மைய திட்டக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது. 
இந்த குழுவில் பணிக் குழு உறுப்பினர்களும், கட்சியின் அனைத்து முன்னணி அமைப்புத் தலைவர்களும் அதிகாரபூர்வ உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங். ஊழல் பள்ளியில் ஜார்க்கண்ட் அரசு பயிற்சி எடுத்துள்ளது -பிரதமர் தாக்கு

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழக யாத்திரிகர்களை மீட்க நடவடிக்கை -முதல்வர்

ஆதி கைலாஷில் நிலச்சரிவு: சிதம்பரம் யாத்ரீகர்கள் 30 பேர் பரிதவிப்பு!

பாக்கியலட்சுமி தொடர் நடிகைக்கு பெண் குழந்தை!

தொகுப்பாளினி உடன் மோதல்... குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை!

SCROLL FOR NEXT