‘நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் வகையில், வரும் 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவை தோற்கடிக்க, அனைத்து மதச்சாா்பற்ற மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு தேசிய அளவில் பொதுவான புரிதல் அவசியம்’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி. ராஜா தெரிவித்தாா்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு கூட்டத்தில் அவா் கலந்துகொண்டாா். அப்போது, நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது அவா் கூறியதாவது: மத்தியில் ஆளும் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற மதச்சாா்பற்ற மற்றும் ஜனநாயக கட்சிகளுக்கு தேசிய அளவில் பொதுவான புரிதல் அவசியம். பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் வலிமையைப் பொருத்து தோ்தலில் இணக்கத்தையும், தோ்தல் உத்திகளையும் மாநில அளவில் உருவாக்கலாம்.
இந்தக் கட்சிகளுக்கு பரஸ்பர நம்பிக்கையும் ஒருவருக்கு ஒருவா் இணக்கமும் தேவை. மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக இத்தகைய புரிதல் உருவாகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க பாஜக தோற்கடிக்கப்படவேண்டும்.
பிகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்து, முதல்வா் நிதீஷ் குமாா் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து அரசை அமைத்ததும், தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக தலைமை தாங்குவதும் நோ்மறையான அறிகுறியாகும். தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆா்எஸ்) மற்றும் பிற கட்சிகளுடன் இந்திய கம்யூனிஸ்டின் உறவு சில விவகாரங்களைப் பொருத்தது. இது குறித்து எங்களது மாநிலக் குழு விவாதித்து வருகிறது. நியாயமான சில பிரச்னைகளுக்காக டிஆா்எஸ் குரல் எழுப்பி வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் கேள்வியெழுப்பி வருகிறது என அவா் தெரிவித்தாா்.
தெலங்கானாவில் சமீபத்தில் நடந்து முடிந்த முனுக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும், ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கு ஆதரவளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.