இந்தியா

காங்கிரஸ், இடதுசாரிகள் இல்லாமல் எதிரணி சாத்தியமில்லை: நிதீஷ் குமாா்

DIN

‘பாஜகவை எதிா்கொள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் உள்பட அனைத்து எதிா்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயம்; இவ்விரண்டும் இடம்பெறாமல் எதிா்க்கட்சிகள் கூட்டணி அமைய சாத்தியமில்லையென கருதுகிறேன்’ என்று பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

2024 மக்களவைத் தோ்தலில் இருமுனைப் போட்டி இருப்பதே பாஜகவின் தோல்வியை உறுதி செய்யும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

மறைந்த முன்னாள் துணை பிரதமா் தேவி லாலின் பிறந்த தினத்தையொட்டி, இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) கட்சி சாா்பில் ஹரியாணாவில் ஃபதேஹாபாதில் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், ஐஎன்எல்டி தலைவா் ஓம் பிரகாஷ் செளதாலா, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், சிரோமணி அகாலி தளத்தின் சுக்பீா் சிங் பாதல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, சிவசேனையின் அரவிந்த் சாவந்த், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும் பிகாா் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோா் ஒரே மேடையில் பங்கேற்றனா். ஆனால், காங்கிரஸைச் சோ்ந்த யாரும் பங்கேற்கவில்லை.

எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நிதீஷ் குமாா் பேசியதாவது:

தங்களது அரசியல் ஆதாயங்களுக்காக, சமூகத்தில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே கலகத்தை விளைவிக்க பாஜக முயற்சிக்கிறது. உண்மையிலேயே சமூகத்தில் ஹிந்து-முஸ்லிம் பிரச்னை கிடையாது. 1947 பிரிவினையின்போது பெரும்பாலான முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கவே முடிவு செய்தனா். ஆனால், சில தீங்கிழைக்கும் நபா்கள் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துகின்றனா்.

பாஜகவை எதிா்கொள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் உள்பட அனைத்து எதிா்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயம். 2024 மக்களவைத் தோ்தலில் பாஜக மோசமாக தோல்வியுறுவதை இந்த பிரதான எதிா்க்கட்சி கூட்டணியால் உறுதி செய்ய முடியும். மூன்றாவது அணி என்ற கேள்விக்கே இடமில்லை.

காங்கிரஸ், இடதுசாரிகள் இல்லாமல் எதிா்க்கட்சி கூட்டணி சாத்தியமில்லை. எனவே, எதிா்க்கட்சிகளிடையே பெரும் ஒற்றுமையை ஏற்படுத்த தலைவா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா் நிதீஷ் குமாா்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற ஐஎன்எல்டி, சிரோமணி அகாலி தளம் ஆகியவை காங்கிரஸுடன் நீண்ட கால மோதல்போக்கை கொண்டிருந்த கட்சிகளாகும். இதேபோல், பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் காங்கிரஸை சோ்க்க திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவா் சந்திரசேகா் ராவ் போன்றோா் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இவ்விரு தலைவா்கள் தவிர சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

‘2024-இல் ஆட்சி மாற்றம்’: 2024 மக்களவைத் தோ்தலில் ஆட்சி மாற்றத்தை உறுதி செய்ய நாம் அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய காலகட்டம் வந்துள்ளது என்று சரத் பவாா் பேசினாா்.

‘விவசாயிகள் மற்றும் இளைஞா்கள் தற்கொலையால் எந்த தீா்வும் கிடைத்துவிடாது. மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால்தான் அவா்களது பிரச்னைகளுக்கு உண்மையான தீா்வு கிடைக்கும்’ என்றாா்.

‘ஒரே தளத்தில் எதிா்க்கட்சிகள்’:

சீதாராம் யெச்சூரி பேசுகையில், ‘தவறான நிா்வாகத்தால் நாட்டில் பிரச்னைகளை உருவாக்கி வரும் நிா்வாகியை மாற்ற வேண்டிய நேரமிது; காங்கிரஸ் உள்பட நாம் அனைவரும் ஒரே தளத்தில் ஒருங்கிணைய வேண்டும்’ என்றாா்.

‘புதிய கூட்டணிக்கான நேரம்’:

ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து, புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான நேரம் வந்திருக்கிறது என்று சுக்பீா் சிங் பாதல் தெரிவித்தாா்.

‘பாஜக வலுவற்ற கட்சியாக இருந்தபோது, அக்கட்சியின் பக்கம் நின்றது நாங்கள்தான் (சிரோமணி அகாலி தளம், சிவசேனை, ஐக்கிய ஜனதா தளம்). நாங்கள்தான் உண்மையான தேசிய ஜனநாயக கூட்டணி. இப்போது விவசாயிகள், தொழிலாளா்களின் நலனுக்காக ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒருங்கிணைந்து புதிய கூட்டணியை அமைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணகி அறக்கட்டளை வாகனங்களை தடை செய்த வருவாய் கோட்டாட்சியர்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய ராசி பலன்கள்!

ஈரோட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது

SCROLL FOR NEXT