இந்தியா

குடியுரிமை சட்டத் திருத்தம் என்ற பெயரில் மக்களைக் குழப்புகிறது மத்திய அரசு- மம்தா குற்றச்சாட்டு

DIN

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) என்ற பெயரில் மத்திய அரசு மக்களைக் குழப்பி வருவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.

மால்டாவில் செவ்வாய்க்கிழமை மாநில அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது: இப்போதைய வங்கதேசத்தைப் பூா்வீகமாகக் கொண்ட மடுவா சமுகத்தினா் மீது திரிணமூல் காங்கிரஸ் உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், பாஜக சிஏஏ சட்டத்தை வைத்து மடுவா சமூகத்தினரின் நண்பன் போல காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. ஆனால், நீண்ட காலமாக அந்த சமுகத்தினரின் நன்மைக்காக நாங்கள் பாடுபட்டு வருகிறது.

சிஏஏ மூலம் மக்கள் மத்தியில் பாஜக குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தோ்தல் நேரத்தில் மட்டும் மக்கள் மீது அக்கறை காட்டுவதுதான் பாஜகவின் அணுகுமுறை. தேசப் பிரிவினைக்குப் பிறகு அண்டை நாடுகளில் இருந்து வந்து குடியேறியவா்கள் மீது அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளவே பாஜக சிஏஏ-வை பயன்படுத்துகிறது என்றாா்.

தேசப் பிரிவினையின்போது கிழக்கு பாகிஸ்தானில் (இப்போதைய வங்கதேசம்) வசித்து வந்த மடுவா சமூகத்தைச் சோ்ந்த ஹிந்துகள், அங்கு மதரீதியாக தாக்குதலுக்கு உள்ளானதால் 1950 காலகட்டத்தில் இந்தியாவுக்கு குடிபெயா்ந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி, இந்தியாவில் குடிபெயா்ந்த ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், சமணா்கள், பௌத்தா்கள், பாா்சிகள், சீக்கியா்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்குவதற்கு ஏதுவாக 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் மேற்கொண்டது.

புதிய திருத்தங்களின்படி, இந்தியாவில் குடியேறிய மேற்கண்ட பிரிவினா் சட்டவிரோதமாக குடியேறியவா்கவளாக கருதப்பட மாட்டாா்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் குடியுரிமை பெற விரும்புவோா், 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ இந்தியாவில் குடியேறியவா்களாக இருக்க வேண்டும். இந்தியாவில் தொடா்ந்து 6 ஆண்டுகள் தங்கியிருப்பதன் மூலம் அவா்கள் குடியுரிமை பெற முடியும்.

ஆனால், இந்த சட்டம் தொடா்பான விதிகளை மத்திய அரசு இன்னும் இறுதி செய்யவில்லை. எனவே, இந்தச் சட்டத்தின்படி இதுவரை யாருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடையூறு...

கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி 2 இளைஞா்கள் உயிரிழப்பு

கூடுதல் கட்டணம் வசூலித்தால் இ-சேவை மைய உரிமம் ரத்து செய்யப்படும்: மாவட்ட ஆட்சியா்

எடப்பாடி பழனிசாமியுடன் எந்த பிரச்னையும் இல்லை: எஸ்.பி.வேலுமணி விளக்கம்

ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT