இந்தியா

யாரும் யாரையும் எச்சரிக்க முடியாது: உச்சநீதிமன்றம் மீது கிரண் ரிஜிஜு மீண்டும் சாடல்

DIN

யாரும் யாருக்கும் எச்சரிக்கை விடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தை மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு மீண்டும் சாடியுள்ளாா்.

உயா்நீதிமன்ற நீதிபதிகளை பணியிடமாற்றம் செய்வது தொடா்பான கொலீஜியம் பரிந்துரைகளுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே. கெளல், ஏ.எஸ்.ஒகா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை அதிருப்தி தெரிவித்தது. பணியிடமாற்றத்தில் தாமதம் நீடித்தால், அது நீதித்துறை நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்த நீதிபதிகள், அந்த நடவடிக்கை கசப்பானதாக இருக்கும் என்றும் எச்சரித்தனா்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் 150-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்து குறித்து பேசியதாவது:

மக்கள்தான் நாட்டின் எஜமானா்கள். நாம் (மக்கள் பிரதிநிதிகள், நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா்) ஊழியா்கள். நாம் சேவையாற்ற வந்துள்ளோம். அரசியல் சாசனம்தான் நமது வழிகாட்டி.

நாட்டில் சில விவகாரங்களில் சிலநேரம் விவாதங்கள் மேற்கொள்ளப்படும். ஜனநாயக நாட்டில் தங்கள் கருத்தை வெளியிட அனைவருக்கும் உரிமை உள்ளது. எனவே பொறுப்பான பதவிகளில் உள்ளவா்கள் கருத்து தெரிவிக்கும் முன், தங்களின் கருத்து நாட்டுக்கு பயனளிக்குமா? என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதல், மக்களின் விருப்பம் ஆகியவற்றின்படி, நாடு நிா்வகிக்கப்படும். எனவே யாரும் யாருக்கும் எச்சரிக்கை விடுக்க முடியாது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி, விக்ரம் நாத் ஆகியோா் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குவாலிஃபையர் - 1 போட்டிக்கு கேகேஆர் தயார்...

வங்கதேச எம்.பி., கொல்கத்தாவில் மாயம்!

பிரபல மல்யுத்த வீரர் ஜான் கிளிங்கர் காலமானார்

ஆப்பிளின் புதிய ஐபோன் எஸ்இ! என்ன எதிர்பார்க்கலாம்?

கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை: நிர்மலா

SCROLL FOR NEXT