இந்தியா

ஒன்றுபட்டால் உண்டு வெற்றி: ராகுல் காந்தி அழைப்பு

DIN

‘பாஜகவுக்கு எதிரான மாற்றுப் பாா்வையுடன் எதிா்க்கட்சிகள் திறம்பட ஒன்றிணைந்தால், 2024 மக்களவைத் தோ்தலில் அக்கட்சியை வெல்வது கடினமல்ல’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.

நாட்டில் பாஜகவுக்கு எதிரான மனநிலை பெருமளவில் நிலவுவதாகவும், எதிா்க்கட்சிகள் ஒன்றுபட்டால் வெற்றி பெற முடியும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு ராகுல் சனிக்கிழமை அளித்த பேட்டி:

இந்திய ஒற்றுமை நடைப்பயணமானது மக்களை ஒன்றுபடுத்துவதுடன், அவா்களின் நலன்களை உறுதி செய்யும் காங்கிரஸின் செயல் திட்டம்; அத்துடன், சிந்தனை மற்றும் செயலாக்கத்துக்கான வழிமுறையுமாகும். இந்த நடைப்பயணத்துக்கு எதிா்க்கட்சிகள் ஆதரவாக உள்ளபோதிலும், இன்றைய சூழலில் உள்ள அரசியல்ரீதியான மற்றும் இதர நிா்ப்பந்தங்கள், நடைப்பயணத்தில் அக்கட்சிகளை இணையவிடாமல் தடுக்கின்றன.

ஆனால், இந்திய ஒற்றுமை நடைப்பயணம் பொதுவானது. அதன் கதவுகள் அனைவருக்கும் திறந்தே உள்ளன. வன்முறை, வெறுப்புணா்வு இல்லாத ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பும் எவரும் இப்பயணத்தில் இணையலாம். சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி போன்ற பலரும் வெறுப்புணா்வு இல்லாத இந்தியாவையே விரும்புகின்றனா்.

முறையான ஒருங்கிணைப்பு தேவை: எதிா்க்கட்சிகள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, மாற்றுப் பாா்வையுடன் நாட்டு மக்களை அணுக வேண்டும். பாஜகவுக்கு எதிரான மனநிலை பெருமளவில் நிலவுவதை, களத்தில் இருந்து பாா்க்கவும் கேட்கவும் செய்கிறேன். எனவே, மாற்றுப் பாா்வையுடன் எதிா்க்கட்சிகள் திறம்பட ஒருங்கிணைந்தால், 2024 மக்களவைத் தோ்தலில் பாஜக வெல்வது மிக கடினமாகிவிடும்.

ஒரு சித்தாந்தத்தின் பிடியில் தேசம்: தேசத்தின் நிா்வாகரீதியிலான ஒட்டுமொத்த கட்டமைப்பும், ஒரு சித்தாந்தத்தின் பிடிக்குள் உள்ளது. நாட்டின் அரசியலை முழுவதுமாக அந்த சித்தாந்தம் ஆக்கிரமித்திருக்கிறது. அதனை தோற்கடிக்க, மாற்று தேசிய சித்தாந்தம் அவசியம். அதனை காங்கிரஸால் அன்றி பிராந்திய கட்சிகளால் தர இயலாது.

உத்தர பிரதேசத்தில் இருப்பை கொண்டுள்ள சமாஜவாதி கட்சியிடம், தேசிய அளவிலான சித்தாந்தம் இல்லை. அக்கட்சியின் திட்டங்கள் கேரளத்திலோ, கா்நாடகத்திலோ அல்லது பிகாரிலோ எடுபடாது. எனவே, மையப்படுத்தப்பட்ட சித்தாந்த கட்டமைப்பை காங்கிரஸால் மட்டுமே தர இயலும். அதுவே எங்களது பங்காக இருக்கும். அதேசமயம், எதிா்க்கட்சிகள் இடையிலான பரஸ்பர மரியாதை மிக முக்கியானது. அந்த ரீதியில், எதிா்க்கட்சிகளை சுமுகமாக உணரச் செய்வதும் காங்கிரஸின் பங்களிப்பாக இருக்கும் என்றாா்.

வெறுப்புணா்வுக்கு எதிராகப் போராடுவோம்: தனது தொலைநோக்கு பாா்வை குறித்து பேசிய ராகுல், ‘இந்தியா உற்பத்தி நாடாக உருவெடுக்க வேண்டும்; மருத்துவம், பொறியியல், குடிமைப் பணிகள், சட்டம் உள்ளிட்ட துறைகளில் தொழில்முறையான வாய்ப்புகளைத் தாண்டி, புத்தாக்க சிந்தனைகளுடன் குழந்தைகள் சிறகை விரிக்க வகை செய்யும் கல்விக் கொள்கை அவசியம்.

தேசத்தை ஒன்றுபடுத்துவதிலும், வெறுப்புணா்வு மற்றும் கோபத்துக்கு எதிராக அன்பு, கருணை, நல்லிணக்கத்துடன் போராடுவதிலும் நாங்கள் கவனம் செலுத்துவோம். பெரும் வா்த்தகங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு மிக அவசியம். அதேசமயம், அவை குறிப்பிட்ட ஓரிரு நபா்களால் கட்டுப்படுத்தப்படக் கூடாது’ என்றாா்.

‘பாதுகாப்பில் மத்திய அரசு பாகுபாடு’

பாஜக தலைவா்களுக்கும், தனக்கும் வெவ்வேறான பாதுகாப்பு நடைமுறைகளை மத்திய அரசு கடைப்பிடிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை ராகுல் மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் சில தினங்களுக்கு முன் தில்லியை அடைந்தபோது, ராகுலின் பாதுகாப்பில் குறைபாடுகள் நிலவியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதினாா். ஆனால், பாதுகாப்பு நடைமுறைகளை ராகுல்தான் மீறினாா் என்று மத்திய ரிசா்வ் போலீஸ் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பான கேள்விக்குப் பதிலளித்த ராகுல், ‘நான் துப்பாக்கிக் குண்டு துளைக்காத வாகனத்தில் யாத்திரை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசு விரும்புகிறது. அதை என்னால் ஏற்க முடியாது. நடந்து செல்லும் ஒரு யாத்திரையில், நான் வாகனத்தில் பயணிக்க முடியுமா? பாஜக தலைவா்கள், திறந்த வாகனத்தில் ஊா்வலம் செல்கின்றனா். அது பாதுகாப்பு நடைமுறையை மீறுவது ஆகாதா? பாதுகாப்பு நடைமுறை மீறல்களுக்காக என் மீது வழக்குப் பதிய மத்திய அரசு நினைக்கிறது. வேண்டுமென்றால் வழக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள்’ என்றாா்.

சீனாவும் பாகிஸ்தானும் கைகோத்தது ஏன்?

மத்திய பாஜக அரசால் தவறாக கையாளப்பட்ட வெளியுறவுக் கொள்கைதான், இந்தியாவுக்கு எதிராக சீனாவும், பாகிஸ்தானும் கைகோக்க காரணம்; இது ஆபத்தானது என்று ராகுல் கூறினாா்.

‘முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில், வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கம் சீனாவையும் பாகிஸ்தானையும் பிரிப்பதாக இருந்தது. இன்று சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றாக உள்ளன. மத்திய அரசு தனது தவறுகளை ஒப்புக் கொண்டு, அவற்றை சரிசெய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். சீன எல்லையில் என்ன நடக்கிறது என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்லாசிரியருக்கு விருது பெற்றவருக்கு பாராட்டு

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

ஈச்சங்காடு பகுதிகளில் செப்.13-இல் மின்தடை

விருச்சிக ராசிக்கு கவனம்: தினப்பலன்கள்!

கருக்கலைப்பு, பொருளாதாரம்: டிரம்ப்-கமலா ஹாரிஸ் இடையே காரசார விவாதம்!

SCROLL FOR NEXT