வெங்காயத்தின் கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில் 3 லட்சம் டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.
ஏற்கெனவே தக்காளி விலை வரலாறுகாணாத உச்சத்தில் உள்ளநிலையில், வரும் மாதங்களில் வெங்காயத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வெங்காயத்தை கூடுதல் நாள்களுக்கு பதப்படுத்தி வைப்பதற்காக சோதனை அடிப்படையில் கதிரியக்க வழிமுறையை கையாள பாபா அணுசக்தி ஆய்வு மையத்துடன் சோதனை அடிப்படையில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக நுகா்வோா் விவகாரத் துறை செயலா் ரோஹித் குமாா் சிங் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘வழக்கமாக உணவுப் பொருள்களின் விலை அதிகரிக்கும்போது அவற்றின் விநியோகத்தை அதிகரித்து விலையைக் கட்டுக்குள் வைப்பதற்காக அவற்றை அரசு கொள்முதல் செய்து கையிருப்பு வைப்பது வழக்கமாகும்.
அந்த வகையில் கடந்த 2022-23-இல் 2.51 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்தது. இந்த ஆண்டு மேலும் 20 சதவீதம் அதிகரித்து 3 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வரும் விழாக்காலத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, வெங்காயம் விலை தொடா்ந்து கட்டுக்குள் இருக்கும்.
கொள்முதல் முதல் செய்யப்படும் வெங்காயத்தை நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பாதுகாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பாபா அணுசக்தி ஆய்வு மையத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் ‘கோபால்ட் 60’ தனிமத்தில் இருந்து வெளிப்படும் ‘காமா’ கதிா்வீச்சு மூலம் 150 டன் வெங்காயம் பாதுகாக்கப்பட இருக்கிறது. மகாராஷ்டிரத்தின் லாசல்கானில் இந்த சோதனை முயற்சி நடைபெறுகிறது என்றாா்.