திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கன்னூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆலப்புழா - கன்னூர் விரைவு ரயிலின் பெட்டிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.
தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டிகளுக்கு அருகே இருந்த பெட்ரோல் டேங்கர் லாரி அதிர்ஷ்டவசமாக தப்பியது. இதற்கு ஏதேனும் சதிச்செயல் காரணமா என்ற கோணத்தில் 4 பேரை கைது செய்திருக்கும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டிகளை, தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் மூன்று ரயில் பெட்டிகள் முழுமையாக தீயில் எரிந்து நாசமானது. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
இது விபத்தா அல்லது ரயில் பெட்டிக்கு தீ வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த ஏப்ரல் மாதம், இதே ரயிலில்தான் 3 பேர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்ததால், அது தொடர்பான சதியா என்ற கோணத்திலும் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டிகளுக்கு அருகே சுமார் 100 மீட்டர் இடைவெளியில்தான், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எரிபொருள் ஏற்றி வந்த டேங்கர் ரயிலும் நின்று கொண்டிருந்தது. இந்த ரயில் பெட்டிகளுக்கு தீ பரவினால் கடும் சேதம் ஏற்பட்டிருக்கும். ஆனால், நூலிழையில், இந்த டேங்கர் லாரிக்கு தீப்பிடிக்கும் முன் அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவங்கள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் காவல்துறையினரிடம் விசாரணை அறிக்கைக் கோரியுள்ளனர்.