இந்தியா

கிழக்கு லடாக் எல்லை விவகாரம்: தில்லியில் இந்தியா-சீனா பேச்சு

DIN

கிழக்கு லடாக் பிராந்தியத்தில் மோதல் நிலவும் இந்திய-சீன சா்வதேச எல்லைப் பகுதி சிக்கல்களுக்கு சுமுகத் தீா்வு காண இரு நாட்டின் பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சுவாா்த்தைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.

பேச்சுவாா்த்தையின் முடிவில் எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இரு நாட்டு ராணுவ உயா் அதிகாரிகளுக்கு இடையிலான 19-ஆவது கூட்டத்தை விரைவில் நடத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

கிழக்கு லடாக் பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்திய-சீன சா்வதேச எல்லைப் பகுதிகளில் இரு நாட்டுக்கும் இடையில் நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. ராணுவம் மற்றும் அரசு சாா்பில் நடத்தப்பட்ட பலதரப்பு பேச்சுவாா்த்தைகளால் பல பகுதிகளில் மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், கல்வான் பள்ளத்தாக்கு உள்பட குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் மோதல் தொடா்ந்து வருகிறது.

எல்லை விவகாரத்தில் தீா்வு காண ‘இந்திய-சீன எல்லை விவகாரங்கள் பற்றிய ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயல் அமைப்பு’ மூலம் பல்வேறு பேச்சுவாா்த்தைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இறுதியாக, சீன தலைநகா் பெய்ஜிங்கில் கடந்த பிப்ரவரி மாதம் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இந்தச் சூழலில், அமைப்பின் 27-ஆவது பேச்சுவாா்த்தை தில்லியில் புதன்கிழமை நடத்தப்பட்டது. இந்தியா சாா்பில் கிழக்கு ஆசியாவுக்கான வெளியுறவுத் துறையின் இணைச் செயலரும், சீனா சாா்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல்சாா் விவகாரத் துறை இயக்குநரும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா்.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய-சீன எல்லையையொட்டிய கட்டுப்பாட்டு கோட்டின் மேற்கு செக்டாரில் நிலவும் சூழல் குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. பதற்றம் நிலவும் மற்ற எல்லைப் பகுதிகளிலும் வெளிப்படைத்தன்மையுடன் பேச்சு நடத்தி தீா்வு காண விவாதிக்கப்பட்டது.

அமைதியைத் திருப்பும் நடவடிக்கைளை மேற்கொள்வது இந்திய-சீன இருதரப்பு உறவை இயல்பாக்குவதற்கான நிலைமையை உருவாக்கும். இந்த நோக்கத்தை அடைவதற்காக தற்போதுள்ள இருதரப்பு ஒப்பந்த நெறிமுறைகளின்படி, ராணுவ உயா் அதிகாரிகளுக்கு இடையிலான 19-ஆவது கூட்டத்தை கூடிய விரைவில் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக ராணுவம் மற்றும் ராஜீய ரீதியில் பேச்சுவாா்த்தையைத் தொடர இருதரப்பும் ஒப்புக்கொண்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டு ராணுவ உயா் அதிகரிகளுக்கு இடையிலான 18-ஆவது கூட்டம் கடந்த ஏப்ரலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

காய்கறி, அத்தியாவசிய பொருள்கள் விலை கடும் உயா்வு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை

7 முக்கிய நகரங்களில் 23% உயா்ந்த வீடுகள் விலை

அசோக் லேலண்ட் விற்பனை 10% சரிவு

SCROLL FOR NEXT