கலால் கொள்கை ஊழல் தொடா்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியாவை போலீஸாா் தாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில், மே 23 ஆம் தேதி நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இக்குற்றச்சாட்டை முன்வைத்த பின்னா், சிசோடியாவை காணொலி காட்சி மூலம் மட்டுமே ஆஜா்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் போலீஸாா் மனு தாக்கல் செய்துள்ளனா்.
சிசோடியாவை காணொலி காட்சி வாயிலாக ஆஜா்படுத்துவதை ஆதரித்து போலீஸாா் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கையில், ‘அவரை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவது ‘குழப்பத்தை உருவாக்குகிறது‘. ஏனெனில் நீதிமன்ற வளாகத்தில் ஆம் ஆத்மி ஆதரவாளா்கள் மற்றும் ஊடகத்தினா் உள்ளனா்’ என்று கூறப்பட்டுள்ளது.
தில்லி சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால், இரண்டு தரப்பிலும் தாக்கலான மனுக்களை பரிசீலித்த பிறகு, சிசோடியாவை காணொலி காட்சி வாயிலாக
ஆஜா்படுத்தும் கோரிக்கைககள் மீதான நிலுவையில் உள்ள அவரது முடிவு மீது உத்தரவிட்டாா். சிசோடியா வியாழக்கிழமை காணொலி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
இந்த வழக்கில் சிசோடியா திகாா் சிறையில் மாா்ச் 9 ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். அங்கு அவா் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். 51 வயதான சிசோடியாவை முதலில் சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கை அந்த அமைப்பும் விசாரித்து வருகிறது.
சுமாா் 270 பக்கங்கள் கொண்ட அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் 2,000 பக்கங்களில் இணைப்புகளும் உள்ளன.
இந்த வழக்கில் சிசோடியாவை ‘முக்கிய சதிகாரா்‘ என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது. ‘மதுபானக் கொள்கை ஊழல் என்பது ஆம் ஆத்மி கட்சியின் சில பெரும் அரசியல் தலைவா்கள் மற்றும் பிஆா்எஸ் மூத்த தலைவா் கே.கவிதா, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்பி மகுண்டா ஸ்ரீநிவாசுலு ரெட்டி உள்ளிட்டோா் அடங்கிய செளத் குரூப் தீட்டிய சதி’ என்று முந்தைய குற்றப்பத்திரிகைகளில் அமலாக்கத் துறை மூலம் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. கவிதா தெலங்கானா மாநில முதல்வா் சந்திரசேகா் ராவ்வின் மகள் ஆவாா்.