ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இன்று இயக்கப்படுகிறது.
சென்னையிலிருந்து ஷாலிமாருக்கு செல்லும் கோரமண்டல் விரைவு ரயில் காலை 10.45 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 10.45 மணிக்கு தாமதமாக செல்கிறது.அதேசமயம், ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திதினர், உறவினர்கள் செல்ல இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து ஒடிசா புவனேஸ்வருக்கு இன்று இரவு 7.20 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயிலில் செல்ல விரும்புவோர் சென்ட்ரலில் உள்ள உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். இதனிடையே ஒடிஸாவில் ரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
இதுதொடா்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘பாலசோரில் ரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 10.40 மணியளவில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. முதல் ரயிலாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து ஒடிஸாவில் உள்ள ரூா்கேலா இரும்பு ஆலையை நோக்கி நிலக்கரி ஏற்றுக்கொண்டு சரக்கு ரயில் சென்றது.
பெங்களூரு-ஹெளரா ரயில், விபத்தில் சிக்கிய அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயில் போக்குவரத்தை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பாா்வையிட்டாா்’ என்று தெரிவித்தனா்.