புதுதில்லி: அசாமில் இரண்டு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று அடிக்கல் நாட்டினார்.
ரூபாய் 535 கோடி திட்ட மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை எண் 15ல் 4-வழி சாலையாக மங்கல்டாய் பைபாஸ் கட்டுவதற்கும், ரூ.517 கோடி மதிப்பில் தாபோகா-பராகுவா தேசிய நெடுஞ்சாலை எண் 29ல் 13 கி.மீ 4-வழி சாலை அமைப்பதற்கும் அமைச்சர் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
அதே வேளையில் தேசிய நெடுஞ்சாலை எண் 127ல் 10 கி.மீ நாகோன் பைபாஸ் முதல் டெலியாகான் 4-வழி சாலை அமைக்க ரூ.247 கோடியும், தேசிய நெடுஞ்சாலை எண் 127ல் கட்டப்பட்ட 8 கி.மீ டெலியாகான்-ரங்காகரா 4 வழி சாலைக்கு ரூ.156 கோடி செலவில் கட்டப்பட்டு அமைச்சரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
கட்கரி தனது உரையில், அசாம் மாநிலம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது. அதே வேளையில் நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி போன்றவற்றுக்கு முன்கூட்டியே ஒப்புதல் மாநில அரசு அளித்தது.
அஸ்ஸாம் மற்றும் முழு வடகிழக்கிலும் சாலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது பிரதமரின் வழிகாட்டுதலாகும். இது தொடர்பாக, வடகிழக்கு மாநிலங்களில் சாலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் கட்கரி.