தில்லி – சான்பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால், ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ரஷியாவில் உள்ள மகதான் நகரிலுள்ள விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டு 216 பயணிகள், 16 ஊழியர்களுடன் சென்ற விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் (AI173) தில்லி முதல் சான்பிரான்சிஸ்கோ வரையிலான பயணத்தை இன்று (ஜூன் 6) தொடங்கியது. இந்த விமானத்தில் 216 பயணிகள், 16 விமான ஊழியர்கள் பயணித்தனர்.
இந்நிலையில், இந்த விமானத்தின் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ரஷியாவின் மகதான் நகரிலுள்ள விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
தரையிறக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்கள் பயண இலக்குகளை சென்றடைவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.