புது தில்லியில் ஷ்ரத்தா வாக்கர் கொலை செய்யப்பட்டது போல, மும்பையில், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணை கொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொலை நடந்த வீட்டில் இருந்து, பெண்ணின் கால்களை மட்டுமே காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். மற்ற உடல்பாகங்கள் வீசப்பட்ட இடங்கள் குறித்து விசாரணையில் கண்டறிந்து உடல் பாகங்களை மீட்கும் சவால் மும்பை காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 56 வயதாகும் மனோஜ் சஹானி (56) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் தன்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த சரஸ்வதி வைத்தியா (36) என்ற பெண்ணை கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் கொலைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை.
இவர்கள் வசித்து வந்த குடியிருப்பிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக, அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரை அடுத்து, வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர், பெண்ணின் கால்கறைக் கண்டறிந்து, குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு நாள்களாக, உடல் பாகங்களை வெட்டி பல்வேறு இடங்களில் வீசியதாகக் குற்றவாளி கூறியிருக்கிறார்.
ஆனால், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், ஓரிரு நாள்களாக அவர் தெரு நாய்களுக்கு தொடர்ந்து உணவிட்டு வந்ததாகவும், இதற்கு முன் அவர் அவ்வாறு செய்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே, உடல் பாகங்களை நாய்களுக்கு வீசியிருப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
புது தில்லியில் சேர்ந்து வாழ்ந்து வந்த ஷ்ரத்தா வாக்கரை, அவரது காதலர் கொலை செய்து உடல் பாகங்களை பல்வேறு இடங்களில் வீசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மும்பையில் அதுபோன்ற சம்பவம் நடந்திருக்கிறது.