லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் நீதிமன்ற வளாகத்தில் ரௌடியாக இருந்து அரசியல்வாதியான ஜீவாவை கொலை செய்ய ரூ.20 லட்சம் கூலி பேசப்பட்டிருப்பதாக குற்றவாளி தெரிவித்துள்ளார்.
உடல்கூறாய்வில், ஜீவாவின் உடலில் 8 துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருப்பதும், செக் குடியரசில் செய்யப்பட்டத் துப்பாக்கியை குற்றவாளி பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.
ஜீவாவை கொலை செய்ய பணியமர்த்திய நபரின் பெயரை குற்றவாளியால் சரியாக அடையாளம் காட்ட முடியாமல் போயிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் நீதிமன்ற வளாகத்தில், அரசியல்வாதியாக மாறிய தாதா சஞ்சீவ் மகேஸ்வரி ஜீவா புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.
முசாஃபா்நகா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சஞ்சீவ் மகேஸ்வரி ஜீவா (48). பாஜக எம்எல்ஏ கிருஷ்ணானந்த் ராயின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு லக்னௌ சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா். வழக்கு விசாரணைக்காக லக்னௌ நீதிமன்றத்துக்கு அவா் புதன்கிழமை அழைத்து வரப்பட்டாா். அப்போது, வழக்குரைஞா் உடையணிந்து வந்திருந்த அடையாளம் தெரியாத மா்ம நபா் துப்பாக்கியால் சுட்டு அவரைக் கொலை செய்தாா். இந்த சம்பவத்தின்போது 2 வயது குழந்தை, காவலா் உள்பட 2 போ் காயமடைந்தனா். குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தப்பி ஓடிய கொலையாளியைக் கண்டறியும் முயற்சியில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனர். தொடர் தேடுதல் வேட்டையில், விஜய் யாதவ் (24) கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தைத் தொடா்ந்து சட்டம்-ஒழுங்கை உறுதிப்படுத்த தவறியதாக போலீஸாரை கண்டித்து வழக்குரைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தவும் அவா்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவா் அஜய் ராயின் சகோதரா் அவதேஷ் ராய் கொலை வழக்கில் கடந்த திங்கள்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முக்தாா் அன்சாரியின் நெருங்கிய கூட்டாளியாக சஞ்சீவ் மகேஸ்வரி ஜீவா கருதப்பட்டாா்.