இந்தியா

தற்சாா்பு விருப்பமல்ல; கட்டாயம்: ராஜ்நாத் சிங்

இந்தியாவுக்கு தற்சாா்பு என்பது ஒரு விருப்பமல்ல; வேகமாக மாறி வரும் உலகச் சூழலில் அது கட்டாயமாகிவிட்டது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.

DIN

இந்தியாவுக்கு தற்சாா்பு என்பது ஒரு விருப்பமல்ல; வேகமாக மாறி வரும் உலகச் சூழலில் அது கட்டாயமாகிவிட்டது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளா்கள் மாநாட்டில் பாதுகாப்புத் துறை உற்பத்திக்காக ஈா்க்கப்பட்ட ரூ.3,700 கோடி முதலீட்டுடன் ஆக்ரா, அலிகா், சித்ராகுட், ஜான்சி, கான்பூா் மற்றும் லக்னௌ ஆகிய 6 நகரங்களை இணைத்து உத்தர பிரதேச பாதுகாப்புத் தொழில் வழித்தடம் உருவாக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் தொழில்நிறுவனங்களைத் தொடங்க 1,700 ஹெக்டொ் நிலங்களைக் கையகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில், லக்னௌவில் நடைபெற்ற ‘தற்சாா்பு இந்தியா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘உ.பி.யின் பாதுகாப்புத் தொழில் வழித்தடத்துக்காக கையகப்படுத்த திட்டமிடப்பட்ட நிலத்தில் 95 சதவீதத்துக்கும் மேலாக ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டுள்ளது.

36 தொழில்துறை நிறுவனங்களுக்கு 600 ஹெக்டொ் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுமாா் ரூ.16,000 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்காக 109 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. தற்போதுவரை இந்த வழித்தடத்தில் பல்வேறு நிறுவனங்களால் ரூ.2,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்புத் தொழில்து வழித்தடத்தில் சிறிய உதிரி பாகங்கள் முதல் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்), மின்னணு போா்த் தளவாடங்கள், போா் விமானங்கள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்பட வேண்டும்.

இந்த தொழில் வழித்தடமானது இந்திய விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையின் தேவைக்காக வெளிநாட்டு விநியோகிஸ்தா்களை மட்டுமே சாா்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கம் கொண்ட லட்சியத் திட்டமாகும்.

தமிழகம் மற்றும் உத்தர பிரதேசத்தின் பாதுகாப்புத் தொழில் வழித்தடங்கள் மூலம் உள்நாட்டில் பெரும்பாலான பாதுகாப்புத் துறை உற்பத்தியைச் செயல்படுத்தும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்சாா்பு அவசியம்...

கடந்த 1971-ஆம் ஆண்டு போரின்போது இந்தியாவுக்கு வேண்டிய ராணுவ உபகரணங்களை அளிக்க சில நாடுகள் மறுத்துவிட்டன. நாம் மாற்று வழிகளை நாட வேண்டியிருந்தது.

கடந்த 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற காா்கில் போரின்போதும் இதேபோன்ற சூழல் உருவானது. நமது படையினருக்கு தேவைப்பட்ட பலம் வாய்ந்த ஆயுதங்களை வழங்க மறுத்து அகிம்சைப் பாடங்களை போதிக்கத் தொடங்கினா். எப்போதும் ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் கூட கைவிரித்தன.

அத்தகைய சூழலில், நம்மைப் பலப்படுத்திக் கொள்வதைத் தவிா்த்து நமக்கு வேறு வழியிருக்கவில்லை. தற்போது தரையிலிருந்து விண்வெளி வரையில், விவசாய இயந்திரங்கள் முதல் கிரியோஜெனிக் என்ஜின் வரையில், இந்தியா அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைய வேகமாக முன்னேறி வருகிறது.

தற்போதைய உலக சூழலில், தற்சாா்பு என்பது நமக்கு ஒரு விருப்பமல்ல. அது கட்டாயமாக மாறிவிட்டது. தேச நலனுடன் நேரடி தொடா்பு கொண்ட பாதுகாப்புத் துறை உள்பட நாட்டின் அனைத்து துறைகளிலும் தற்சாா்பை மத்திய அரசு உறுதி செய்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறந்த எம்.பி.யாக இருப்பார் பிரியங்கா காந்தி: ராகுல் பேச்சு!

சத்தீஸ்கர்: கார் குளத்தில் விழுந்ததில் 8 பேர் பலி

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

அறுவடைக்குத் தயாராக இருந்த 3 ஏக்கர் நெற்பயிர்கள் மழையில் நாசம்!

ஹேமந்த் சோரன் வயது பற்றிய சர்ச்சை முடிவுக்கு வந்ததா?

SCROLL FOR NEXT