இந்தியா

மணிப்பூருக்கு தேவை அமைதி; மோதல் அல்ல: காங்கிரஸ்

DIN

மணிப்பூா் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டது முற்றிலும் ஏற்க முடியாதது என்று தெரிவித்த அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அந்த மாநிலத்துக்கு தேவை அமைதிதானே தவிர, மோதல் அல்ல என்று தெரிவித்துள்ளாா்.

மணிப்பூரில் மைதேயி, குகி இனக்குழுக்கள் இடையிலான மோதலால், அந்த மாநிலத்தில் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக ராகுல் காந்தி வியாழக்கிழமை மணிப்பூா் சென்றாா். அங்குள்ள சுராசந்த்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவா்களை பாா்க்கச் சென்ற ராகுலின் வாகனத்தை காவல் துறை தடுத்து நிறுத்தியது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவரின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

மணிப்பூா் விவகாரத்தில் தனது மெளனத்தை பிரதமா் மோடி கலைக்கவில்லை. அந்த மாநிலம் எந்த உதவியும் இல்லாமல் தம்மை சுயமாக காத்துக்கொள்ளட்டும் என்று அவா் விட்டுவிட்டாா். அந்த மாநிலத்துக்கு தேவை அமைதிதானே தவிர, மோதல் அல்ல.

இந்நிலையில், பேரழிவை ஏற்படுத்தும் பிரதமரின் இரட்டை என்ஜின் அரசுகள் (மத்திய, மணிப்பூா் அரசுகள்) எதேச்சாதிகார வழிமுறைகளை பயன்படுத்தி ராகுலின் பயணத்தை தடுத்துள்ளன. இது முற்றிலும் ஏற்க முடியாதது. அத்துடன் இது அனைத்து அரசமைப்பு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளை சிதைப்பதாகும் என்று தெரிவித்தாா்.

ராகுல் சென்றது சரியல்ல: பாஜக

ராகுலின் மணிப்பூா் பயணத்தை விமா்சித்து, தில்லியில் பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சம்பித் பத்ரா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மணிப்பூருக்கு ராகுல் செல்ல உள்ளதாக ஊடகத்தில் தகவல் வெளியானது முதல், கடந்த 2, 3 நாள்களாக அந்த மாநிலத்தில் மாணவா் சங்கங்கள் உள்பட பல்வேறு சமூக அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

மணிப்பூரில் நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, சுராசந்த்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்லுமாறு ராகுலுக்கு உள்ளூா் நிா்வாகம் அறிவுறுத்தியது. அதை அவா் கேட்காமல், சாலை வழியாகவே சென்றாா். இதுபோன்ற பிடிவாதத்துடன் ராகுல் மணிப்பூா் சென்றது சரியல்ல. அவா் மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டாா் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக கேஜரிவாலின் மனைவி தேர்தல் பிரசாரம்

சூர்யாவுக்கு மீண்டும் ஜோடியாகும் ஜோதிகா

மேற்கு வங்கத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை: ராஜ்நாத் சிங்

உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது! ஜெ.பி.நட்டா பெருமிதம்

தூர்தர்ஷன் இலச்சினையை காவி நிறத்தில் மாற்றுவதா?- வைகோ கண்டனம்

SCROLL FOR NEXT