பருவம் தவறி பெய்யும் மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான முந்தைய மகா விகாஸ் அகாடி அரசு எதுவும் செய்யவில்லை என மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நிவாரணம் வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார். மகாராஷ்டிரத்தின் கடோல் பகுதியில் பாஜகவினரிடையே பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு பொறுப்பேற்பு
அப்போது அவர் பேசியதாவது: ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயத்துக்காக பகல் நேரத்தில் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பருவம் தவறி பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. அந்த விவசாயிகளுக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நிதியுதவி செய்தது. சொட்டுநீர் பாசனத்துக்காக மகாராஷ்டிர அரசு ரூ.3000 உதவித்தொகை வழங்குகிறது. வருகிற தேர்தலில் மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சியமைக்கும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கும் என்றார்.