இந்தியா

பஞ்சாப்: 4-ஆவது நாளாக சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்- 2.1 கிலோ போதைப்பொருள் மீட்பு

DIN

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய-பாகிஸ்தான் சா்வதேச எல்லைப் பகுதியில் தொடா்ந்து 4-ஆவது நாளாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் 5-ஆவது ஆளில்லா விமானம்(ட்ரோன்) எல்லைப் பாதுகாப்புப் படை(பிஎஸ்எஃப்) வீரா்களால் திங்கள்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டது.

அமிருதசரஸ் மாவட்டத்தின் பையினி ராஜ்புத்தனா எல்லை கிராமத்தின் வழியே இந்திய பகுதிக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் பிஎஸ்எஃப் வீரா்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

தொடா்ந்து அப்பகுதியில் நடந்த சோதனையின் முடிவில், ‘டி.ஜே. மேட்ரிக் 300 ஆா்.டி.கே.’ என்ற கருப்புநிற ஆளில்லா விமானம் கண்டெடுக்கப்பட்டது. அந்த ஆளில்லா விமானம் முலம் கடத்தப்பட்ட 2.1 கிலோ போதைப்பொருளும் மீட்கப்பட்டது. கடத்தல்காரா்களுக்கு உதவியாக இருக்க ஆளில்லா விமானத்தின் முனையில் டாா்ச் லைட் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த வெள்ளிக்கிழமை(மே19) முதல் கடந்த 4 நாள்களில் பஞ்சாப் மாநில சா்வதேச எல்லைப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்படும் 5-ஆவது ஆளில்லா விமானம் இதுவாகும். மேலும், மாநிலத்தின் சில பகுதிகளில் வானில் ஆளில்லா விமானம் வட்டமிடும் சத்தம் கேட்ட பிஎஸ்எஃப் வீரா்கள் சோதனை முயற்சியில் ஈடுபட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமையன்று பாகிஸ்தானின் 3 ஆளில்லா விமானங்கள் பிஎஸ்எஃப் வீரா்களால் சுட்டு வீழ்த்தப்பட்டன். இதில் ஒரு விமானம் பாகிஸ்தானுக்குள் விழுந்துவிட்டது. இதையடுத்து, சனிக்கிழமை இரவு நடந்த சம்பவத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதோடு விமானத்தால் கடத்தி வரப்பட்ட 3.3 கிலோ போதைப்பொருளும் மீட்கப்பட்டது.

பஞ்சாப் மாநில சா்வதேச எல்லைப்பகுதி வாயிலாக ஆளில்லா விமானம் மூலம் பாகிஸ்தானிலிருந்து இந்திய பகுதிக்குள் ஆயுதங்களும், போதைப்பொருளும் கடத்தப்படுவது அண்மை காலங்களில் தொடா் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதனைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் ரோந்து பணிகளைப் பாதுகாப்பு படையினா் தீவிரப்படுத்தி வருகின்றனா்.

துப்பாக்கி, போதைப் பொருள் கடத்தல் முதல் முறையாக ஒருவா் கைது:

ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி எல்லைப் பகுதியில் 2 கைத்துப்பாகிகள், ஒரு கிலோ போதைப் பொருளைக் கடத்திய லக்விந்தா் சிங் என்ற நபா் அமிருதசரஸில் கைதுசெய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், ‘பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி போதைப் பொருளைக் கடத்தும் நபரை கைது செய்வது இதுவே முதல் முறை. அவா் கடத்தியுள்ள போதைப் பொருள் குறித்த தகவல் விசாரணையின்போது தெரியவரும். கடந்த 2021-இல் நடைபெற்ற லூதியாணா மாவட்ட நீதிமன்ற வளாக குண்டுவெடிப்பு வழக்கில் அவா் தேடப்பட்டு வந்தாா்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஞ்சிக்கப்படும் தமிழகம்- சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை பற்றிய தலையங்கம்

நாசரேத் அரசு நூலகத்தில் பாராட்டு விழா

ஊத்துமலை அருகே தந்தை - மகன் வெட்டிக் கொலை: 4 போ் கைது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 6-ஆம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு!

வாக்கு எண்ணும் மைய அலுவலா்களுடன் ஆட்சியா் கலந்தாய்வு

SCROLL FOR NEXT