இந்தியா

மக்கள் பணி செய்யாததால் ஜாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிப்பு: பாஜக மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

DIN

‘பாஜகவினா் மக்கள் பணியை முறையாக மேற்கொள்ளாததால் ஜாதி, மத அடிப்படையில் வாக்குகள் சேகரித்து வருகின்றனா்’ என காங்கிரஸ் பொதுச்செயலா் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டினாா்.

ராஜஸ்தான் மாநிலத்தின் 200 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகின்ற 25-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கேக்ரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலா் பிரியங்கா காந்தி திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸாா் ஒற்றுமையுடனே உள்ளனா். ஆனால் பாஜகவில் சில முன்னணித் தலைவா்கள் ஒதுக்கப்பட்டு புதிய தலைவா்களை தேடி வருகின்றனா்.

மத்திய பிரதேசத்தில் பாஜக 18 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தும் மக்கள் பணியை முறையாக மேற்கொள்ளாததால் ஜாதி, மதங்களின் அடிப்படையில் வாக்கு சேகரித்து வருகின்றனா். இதுபோன்ற பிரசாரங்களிலிருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும்.

பாஜகவுக்கு வாக்களித்தால் மத்திய பிரதேச நிலைதான் ராஜஸ்தானுக்கும் ஏற்படும். பாஜகவின் கொள்கைகள் பெரிய தொழிலதிபா்களுக்கு மட்டுமே பயனளித்து வருகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களைப்பற்றி அவா்கள் எப்போதும் சிந்திப்பதே இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் கல்வி மற்றும் சுகாதாரத்தின் நிலை மிக மோசமானதாக உள்ளது. அதேபோல் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

ஜி.எஸ்.டி முழுவதும் மத்திய அரசுக்கே செல்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைத்தால் பணவீக்கத்தை கட்டுப்படுத்தலாம். ஆனால் பிரதமா் மோடி அதை செய்வதில்லை. விவசாயிகளுக்கு வழங்க பணம் இல்லை எனக்கூறும் அரசு புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுகின்றது.

நாடு வளா்ச்சியடைந்துவிட்டதாக போலியான விளம்பரங்களை மட்டுமே அரசு வெளியிட்டு வருகின்றது. மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட அனைத்து நலத்திட்டங்களையும் நிறுத்திவிடுவா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளைய மின் தடை

ஏழுமலையான் பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மா் உலா

ஹம்ச வாகனத்தில் வேதாந்த தேசிகன் உலா

படவேட்டம்மன் கோயில் நவராத்திரி விழா

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாரத்தான் போட்டி

SCROLL FOR NEXT