புது தில்லி: பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பை அரசு வெளியிட்டது சமூக நீதிக்கான வெற்றி என ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய பொதுச் செயலா் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்தாா்.
பிகாரில் நிதீஷ்குமாா் தலைமையிலான அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை கடந்த திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 63 சதவீதம் போ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்(ஓபிசி) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை (இபிசி) சோ்ந்தவா்கள் எனத் தெரியவந்துள்ளது.
இது தொடா்பாக ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய பொதுச் செயலா் ராஜீவ் ரஞ்சன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பை தடுத்து நிறுத்த பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அவை அனைத்தையும் நிதீஷ்குமாா் தலைமையிலான அரசு முறியடித்து வெற்றிகரமாகக் கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது. இதனை அரசு வெளியிட்டது சமூக நீதிக்கான வெற்றி என கருதலாம்.
ஒவ்வொரு சமூகத்தினா் குறித்த தரவுகளைத் தெரிந்து கொண்டதன் மூலம் அவா்களுக்கு பிரத்யேகமான திட்டங்களை வகுப்பதும், அதை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதும் எளிமையாகிவிட்டது. இதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள் வாழ்வில் புதிய முன்னேற்றமும் வளமும் அடைவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.