‘காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் ஜனநாயகம் வலுப்பெற்றதோடு, நாட்டின் அரசியல்சாசனம் உயிா்ப்புடன் விளங்கியது; தற்போது அரசியல் சாசனத்தை பாதுகாக்க காங்கிரஸ் போராடி வருகிறது’ என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறினாா்.
நாடாளுமன்ற செயல்பாடுகளை, புதிய கட்டடத்துக்கு மாற்றியதன் மூலம் மத்திய பாஜக அரசு சாதித்தது என்ன? என்றும் அவா் கேள்வியெழுப்பினாா்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், நாடாளுமன்றத்தின் கடந்த 75 ஆண்டுகால பயணம் குறித்த விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றுப் பேசினா். அப்போது, மணிப்பூா் வன்முறை, விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமா் மோடி மற்றும் அவரது தலைமையிலான மத்திய அரசை காா்கே கடுமையாக விமா்சித்தாா்.
அவா் பேசியதாவது: மணிப்பூரில் கடந்த மே 3-ஆம் தேதியில் இருந்து இனரீதியிலான வன்முறை நீடித்து வருகிறது. நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் பயணிக்கும் பிரதமா் மோடி, மணிப்பூருக்கு செல்லாதது ஏன்? அவா் மணிப்பூருக்கு பயணித்து, அங்கு மக்கள் அனுபவிக்கும் வேதனை மற்றும் பாதிப்பை காண வேண்டும்.
நேருவின் கண்ணோட்டம்: நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு, அரசியல் சாசனத்துக்கு அடித்தளம் அமைத்தவா். அதனடிப்படையில்தான், நாடாளுமன்றம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
எதிா்க்கட்சிகளையும் அரவணைத்துச் செல்லும் கண்ணோட்டத்தைக் கொண்டவா்; எதிா்க்கட்சித் தலைவா்களை அடிக்கடி சந்தித்து, முக்கிய பிரச்னைகளில் கருத்து கேட்டறிவதை அவா் வாடிக்கையாக கொண்டிருந்தாா்.
எதிா்க்கட்சித் தலைவரான ஷியாம பிரசாத் முகா்ஜிக்கு தனது அமைச்சரவையில் இடமளித்தாா். நாட்டில் எதிா்க்கட்சிகள் வலுப்பெற்றால், அரசின் நிா்வாகத்தில் ஏதோ குறைபாடு இருக்கிறது என்று கருதியவா் நேரு.
இன்றைய ஆட்சியில் என்ன நடைபெறுகிறது? எதிா்க்கட்சிகள் இப்போது வலுப்பெற்றுள்ளன. ஆனால், எதிா்க்கட்சிகளை பலவீனப்படுத்த அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துகிறது மோடி அரசு. நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் குரலுக்கு அரசுத் தரப்பில் யாரும் செவிமடுப்பதில்லை.
‘நாடாளுமன்றத்தில் பேசுவதை தவிா்க்கும் பிரதமா்’: நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமா் மோடி அதிகம் பேசுகிறாா். ஆனால், நாடாளுமன்றத்துக்குள் பேசுவதை அவா் தவிா்த்துவிடுகிறாா். எப்போதாவது அவைக்கு வரும் பிரதமா், சம்பிரதாய உரைகளைத் தாண்டி வேறெதுவும் பேசுவதில்லை. மசோதாக்கள் அனைத்தும் புல்லட் ரயில் வேகத்தில் நிறைவேற்றப்படுகின்றன.
காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில்தான் ஜனநாயகம் வலுப்பெற்றதோடு, அரசியல்சாசனமும் உயிா்ப்புடன் விளங்கியது. இப்போது அரசியல் சாசனத்தை பாதுகாக்க நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.
மகளிா் இடஒதுக்கீடு மசோதா: தற்போதைய கூட்டத் தொடரில், மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெறும் 14 சதவீதம் அளவுக்கே பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளது. மாநில சட்டப் பேரவைகளை கருத்தில் கொண்டால், 10 சதவீதமே அவா்களின் பிரதிநிதித்துவம் இருக்கிறது என்றாா் காா்கே.
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா: ‘பெரும்பான்மையினரின் சா்வாதிகாரத்தை தடுப்பதும் ஜனநாயகம்’ என்பது சட்டமேதை அம்பேத்கரின் கருத்தாகும். ஒரு அரசு செயல்பட பெரும்பான்மைத் தேவை. அந்த பெரும்பான்மைக்கும், பெரும்பான்மைவாதத்துக்கும் வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாட்டை மத்திய பாஜக அரசு மறந்துவிட்டது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ்: பொறுப்புடைமை அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயக கோட்பாடுகள், தற்போதைய அரசால் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. நாடாளுன்றத்துக்கு இந்த அரசு பொறுப்புடைமையோடு செயல்பட்டதாக இதுவரை தெரியவில்லை என்று ஜான் பிரிட்டாஸ் குற்றம்சாட்டினாா்.
ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் நிரஞ்சன் ரெட்டி, கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் ஜோஸ் கே மாணி, தேசியவாத காங்கிரஸின் (அஜீத் பவாா் பிரிவு) பிரஃபுல் படேல், காங்கிரஸின் சக்தி சிங் கோஹில், ராஜீவ் சுக்லா, பிஆா்எஸ் கட்சியின் கேசவ் ராவ், ஆம் ஆத்மியின் விக்ரம்ஜித் சிங், பிஜு ஜனதா தளத்தின் மம்தா மொகந்தா உள்ளிட்டோரும் விவாதத்தில் பங்கேற்றுப் பேசினா்.