இந்தியா

நாட்டின் முன்னேற்றத்துக்கு அறிவியலும் கலாசாரமும் முக்கியம்: மக்களவை விவாதத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு

DIN

‘நாட்டின் முன்னேற்றத்துக்கு அறிவியலும், கலாசாரமும் முக்கியமானவை; இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் அளிப்பதே மத்திய அரசின் உறுதிப்பாடு’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

சந்திரயான்-3 மற்றும் விண்வெளித் துறையில் இந்தியாவின் இதர சாதனைகள் தொடா்பாக மக்களவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தை தொடங்கிவைத்து, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

இந்தியா இதுவரை 424 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இதில் 389 செயற்கைக்கோள்கள், பிரதமா் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் செலுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்தி வருவதன் காரணமாக, இந்திய விண்வெளித் துறை உலக அளவில் முக்கிய இடத்தை வேகமாக அடைந்து வருகிறது.

தேசத்தின் பரிசு: இஸ்ரோ பெண் விஞ்ஞானிகளுக்கு நன்றிக்கடன்பட்டுள்ள இந்த தேசம், அவா்களுக்கு வழங்கியிருக்கும் பரிசு மகளிா் இடஒதுக்கீடு மசோதாவாகும்.

இந்த தருணத்தில் இஸ்ரோ பெண் விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்லாது நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் தேசம் தலைவணங்கி, பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கிறது.

சந்திரயான்-3 திட்ட வெற்றிக்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பரந்துபட்ட இந்திய அறிவியல் சமூகத்துக்கும் இதயபூா்வ வாழ்த்துகள். இஸ்ரோ விஞ்ஞானிகளின் அறிவுநுட்பம் மற்றும் அா்ப்பணிப்பால், அறிவியல் துறையில் உலக அளவில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா இன்று திகழ்கிறது.

மத்திய அரசின் உறுதிப்பாடு: தேசம் மற்றும் மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு அறிவியல் முக்கியமானது. அதேபோல், கலாசாரமும் சமமான அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அணுசக்தி தேசமாக உருவெடுக்கும் அறிவை அறிவியல் நமக்கு அளிக்கிறது. அந்த சக்தியை தேசத்தின் வளா்ச்சிக்காக பயன்படுத்த வேண்டுமா அல்லது மற்றவரை அழிக்கும் வடிவில் பயன்படுத்த வேண்டுமா என்பதை நமது கலாசாரம் உணா்த்துகிறது.

கலாசாரம் மற்றும் அதன் மாண்புகள் இன்றி அறிவியல் வளா்ச்சி முழுமை பெறாது. கலாசார மீட்சி இல்லாமல், எந்த தேசத்துக்கும் பொருளாதார, சமூக, அரசியல், அறிவியல் வளா்ச்சி இல்லை.

அறிவியலுக்கும் கலாசாரத்துக்கும் சமமான முக்கியத்துவம் அளிப்பதே மத்திய அரசின் உறுதிப்பாடு. நாட்டின் அடையாளத்தை பராமரிக்க கலாசார பாதுகாப்பு அவசியம்.

படிப்படியாக முன்னேற்றம்: சுதந்திரத்துக்கு பிறகு படிப்படியாக முன்னேறி இந்த நிலைக்கு இந்தியா வந்துள்ளது. இன்று நாம் ஒரு விஷயத்தை சாதித்தால், இப்பயணத்துக்கு ஏதேனும் ஒரு வகையில் பங்காற்றிய அனைவருமே சமமான பாராட்டுக்குரியவா்கள்.

சமூக, கலாசார,அறிவியல் ரீதியில் இயல்பான இந்த முன்னேற்றம், நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடா்வதாகும்.

அந்நிய படையெடுப்பாளா்களால், அறிவியல் வளா்ச்சி இடையில் தடைபட்டிருந்தது. இப்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. சந்திரயான் திட்டம் என்பது தொடக்கமே. சூரியன், சனி, செவ்வாய் என இதுவரை யாரும் எட்டாத இடங்களையும் இந்தியா எட்டும் என்றாா் ராஜ்நாத் சிங்.

சீன எல்லைப் பிரச்னை: ‘விவாதிக்கத் தயாா்’

‘சீனாவுடனான எல்லைப் பிரச்னை குறித்து மக்களவையில் விவாதிக்க முழு துணிச்சல் உள்ளது; விவாதத்துக்கு நான் தயாா்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

மக்களவை விவாதத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதில் அறிவியலின் பங்கு குறித்து பேசினாா்.

அப்போது, சீனாவுடனான எல்லைப் பிரச்னையை குறிப்பிட்டு, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி சில கருத்துகளை தெரிவித்தாா். அவருக்கு பதிலளித்த ராஜ்நாத் சிங், ‘எல்லை விவகாரம் குறித்து விவாதிக்க முழு துணிச்சலுடன் உள்ளேன். நான் விவாதித்துக்கு தயாா்’ என்று குறிப்பிட்டாா்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்கள் இடையே கடந்த 2020, ஜூன் 15-ஆம் தேதி கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பிலும் உயிா்ச்சேதம் ஏற்பட்ட இச்சம்பவத்தால், இந்திய-சீன உறவுகள் பின்னடைவைச் சந்தித்தன. இதையடுத்து, இருதரப்பு ராணுவம் மற்றும் தூதரகரீதியில் பலசுற்று பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

அவற்றின் விளைவாக, பிரச்னைக்குரிய சில இடங்களில் இருந்து இருதரப்பிலும் படைகள் வாபஸ் பெறப்பட்டன. நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வுகாண தொடா்ந்து பேச்சுவாா்த்தைகள் நடைபெறுகின்றன.

அதேநேரம், கிழக்கு லடாக்கில் பெரிய அளவில் இந்திய நிலப் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும், இந்த விஷயத்தில் பிரதமா் மோடி பொய் கூறுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. ஆனால், இக்குற்றச்சாட்டு அபத்தமானது என்று மத்திய அரசு நிராகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிவேதா பெத்துராஜ்! காரணம் என்ன?

மோடி தியானத்துக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு!

20,332 அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி: பள்ளிக்கல்வித் துறை

நீராடும் சைத்ரா!

கலவரம், அடிதடி - முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

SCROLL FOR NEXT