தலைநகரான தில்லியில் நகைக்கடையின் சுவற்றில் துளையிட்டு ரூ.25 கோடி மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடுத்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடுமுறை நாளுக்கு மறுநாள், உரிமையாளர் கடையைத் திறந்து பார்த்தபோது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
தில்லி போகல் பகுதியில் பிரமாண்ட நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடையின் உரிமையாளரான சஞ்சய் ஜெயின் திங்கள் கிழமை விடுமுறையை முடித்துவிட்டு செவ்வாய்க்கிழமை காலையில் கடையைத் திறக்கும்போது கடையில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
கடையில் மேற்புறம் வாயிலாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், நகைகள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் சுவற்றை துளையிட்டு உள்ளே நுழைந்துள்ளனர். பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கடையின் உள்புறம் முழுக்க தூசி படிந்திருந்ததாகவும் சிசிடிவி சேதமடைந்திருந்ததாகவும் கடையின் உரிமையாளர் சஞ்சய் ஜெயின் தெரிவித்தார்.
மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பு சுமார் ரூ.25 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய தில்லி தென்கிழக்கு நகர துணை ஆணையர் ராஜேஷ் தியோ, மிகப்பெரிய கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்களைப் பிடிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடயவியல் துறையினரின் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார்.