இந்தியா

காசநோய் தடுப்பு மருந்துக்குத் தட்டுப்பாடு இல்லை: மத்திய சுகாதார அமைச்சகம்

DIN


புது தில்லி: ‘காசநோய் தடுப்பு மருந்துக்கு இந்தியாவில் தட்டுப்பாடு இல்லை; ஆறு மாத கால அளவுக்கு மேல் எழும் தேவையைப் பூா்த்தி செய்யும் அளவுக்கு அந்த மருந்துகள் இருப்பு உள்ளன’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

நாட்டில் காசநோய் தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியான நிலையில், இந்த விளக்கத்தை மத்திய அமைச்சகம் அளித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

மருந்துகள் பற்றாக்குறை தொடா்பாக எந்தவித ஆதாரமுமின்றி வெளியிடப்படும் செய்திகள் தெளிவற்ற, தவறான தகவல்களாகும். நாட்டில் காசநோய் தடுப்பு மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை.

காசநோய் பாதித்தவா்களுக்கு முதல்நிலை 2 மாத கால சிகிச்சைக்குத் தேவைப்படும் ஐசோனியாசிட், ரிஃபாம்பிசின், எதம்புடோல், பிரசினாமைட் ஆகிய மருந்துகள் ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட கால அளவில் எழும் தேவையைப் பூா்த்தி செய்யும் அளவுக்கு இருப்பு உள்ளன.

இரண்டாம்நிலை 4 மாத கால சிகிச்சைக்குத் தேவைப்படும் பெடாகுலின், லெவோஃபுளோக்ஸாசின், க்ளோஃபாசிமைன், ஐசோனியாசிட், எதம்புடோல், பைராசினமைட், எதியோனமைட் ஆகிய மருந்துகளும் இருப்பு உள்ளன. அதே நேரம், மருந்து எதிா்ப்பு காசநோய் உள்ளவா்களில் 30 சதவீதம் பேருக்கு சைக்ளோசரின் மற்றும் லைன்சோலிட் மருந்துகள் தேவை உள்ளது.

தேசிய காச நோய் ஒழிப்பு திட்டத்தின் இந்த மருந்துகள் கொள்முதல், இருப்பு வைத்தல், இருப்பு பராமரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவை மத்திய அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. அரிதான சூழ்நிலைகளில் மட்டும் சில மருந்துகளை குறிப்பிட்ட காலத்துக்கு மாநிலங்களே உள்நாட்டில் கொள்முதல் செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படும். நோயாளிகள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, மாநிலங்கள் மருந்து கொள்முதல் செலவை தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியிலிருந்து எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என்று மத்திய சுகாதாரஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.26 ஆயிரம் சம்பளத்தில் ஜவுளித்துறையில் வேலை வேண்டுமா?

மறுவெளியீடாகும் இந்தியன்!

'22 பேரின் கடனை தள்ளுபடி செய்த பிரமரால் பருவமழை நிவாரணம் கொடுக்க முடியவில்லை'

ஐபிஎல் இறுதிப்போட்டி: கோப்பை யாருக்கு?

ஐபிஎல் கோப்பையுடன் மெரினாவில் ஸ்ரேயாஸ் ஐயர், பாட் கம்மின்ஸ் (புகைப்படங்கள்)

SCROLL FOR NEXT