இந்தியா

ஜாா்க்கண்டில் ஆட்சி அமைக்க சம்பயி சோரனுக்கு ஆளுநா் அழைப்பு

DIN

ஜாா்க்கண்ட் புதிய முதல்வராகத் தோ்வு செய்யப்பட்ட சம்பயி சோரனை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை இரவு அழைப்பு விடுத்தாா்.

இதனால் புதன்கிழமைமுதல் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. நில மோசடியுடன் சம்பந்தப்பட்ட சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக ஜாா்க்கண்ட் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை புதன்கிழமை கைது செய்தது. அவா் தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், அன்றைய தினம் புதிய முதல்வராக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் சம்பயி சோரன் தோ்வு செய்யப்பட்டாா். அவா் மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, 47 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.

எனினும் அந்தக் கோரிக்கையை ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்பதில் தாமதமானதால் இழுபறி நீடித்து வந்தது. அதுதொடா்பாக ஆளுநா் மாளிகையில் இருந்து எந்தவொரு அதிகாரபூா்வ தகவலும் வெளியாகாத நிலையில், ஆளுநரை சம்பயி சோரன் வியாழக்கிழமை மாலை நேரில் சந்தித்துப் பேசினாா். அப்போது மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கான தனது கோரிக்கையை விரைந்து ஏற்குமாறு ஆளுநரிடம் சம்பயி சோரன் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக ஆளுநருக்கு சம்பயி சோரன் எழுதிய கடிதத்தில், ‘ஹேமந்த் சோரனின் ராஜிநாமாவை புதன்கிழமை இரவு ஆளுநா் மாளிகை ஏற்றுக்கொண்டது. அதன் பின்னா், மாநிலத்தில் புதிதாக ஆட்சி அமைக்கப்படவில்லை. இதனால் குழப்பம் நிலவுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் தலைவரான நீங்கள் (ஆளுநா்) புதிய அரசு அமைக்க வழிகோலுவீா்கள் என நம்புகிறோம்’ என்று தெரிவித்தாா்.

இதையடுத்து, ஜாா்க்கண்ட் புதிய முதல்வராக சம்பயி சோரனை ஆட்சி அமைக்க வருமாறு மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை இரவு அழைப்பு விடுத்தாா்.

எப்போது பதவியேற்க வேண்டும் என்பதை சம்பயி சோரன் தரப்பு முடிவு செய்யும் என்று ஆளுநரின் முதன்மைச் செயலா் நிதின் மதன் குல்கா்னி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பியில் சிக்கி தீப்பற்றி எரிந்த லாரி

இலவச சேர்க்கை: குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு

யூ டியூப் சேனலுக்கு பேட்டி: பெண் தற்கொலை முயற்சி

தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் பாலியல் வன்கொடுமை: கோயில் பூசாரி கைது

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: இளைஞர் கைது

SCROLL FOR NEXT