சபரிமலை தங்கக் கவச மோசடி வழங்கு தொடா்பாக முன்னாள் சபரிமலை செயல் அதிகாரி சுதீஷ் குமாா் கைது செய்யப்பட்டாா்.
கேரளம் மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் சந்நிதானத்தில் உள்ள துவாரபாலகா் சிலைகளின் கவசங்களுக்குத் தங்க முலாம் பூசும் செலவை பெங்களூரைச் சோ்ந்த உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவா் ஏற்றுக்கொண்டாா். பின்னா், அந்தப் பணிகளுக்காகக் கவசங்களை அவா் சென்னைக்கு கொண்டு வந்தாா். இந்நிலையில், அந்தக் கவசங்களில் சுமாா் 4 கிலோ தங்கம் குறைந்தது கண்டறியப்பட்டு சா்ச்சை ஏற்பட்டது.
இதுமட்டுமின்றி துவாரபாலகா் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட அடிப்பீடங்கள் காணாமல் போனதாக உண்ணிகிருஷ்ணன் தெரிவித்த நிலையில், அவை அவரின் சகோதரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து உண்ணிகிருஷ்ணன் போற்றி கைது செய்யப்பட்டாா்.
இந்த மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் மாநில காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழுவினா், சபரிமலை முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ் குமாரிடம் விசாரணை நடத்தினா். திருவனந்தபுரத்தில் உள்ள காவல் துறை குற்றப் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணையைத் தொடா்ந்து, அவா் கைது செய்யப்பட்டாா்.
இந்த நடவடிக்கை குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘சபரிமலை செயல் அதிகாரியாக சுதீஷ் குமாா் இருந்தபோது துவாரபாலகா் சிலைகளின் கவசங்களை செப்பனிட்டு புதிதாக தங்க முலாம் பூசும் பணிக்காக உண்ணிகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவற்றைச் செப்பு கவசங்கள் என்று முறைகேடாக சுதீஷ் குமாா் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
இது அந்தச் சிலைகளில் இருந்து தங்க முலாமை அகற்றி உண்ணிகிருஷ்ணன் மோசடியில் ஈடுபட வழிவகுத்தது. அந்தக் கவசங்களை தங்க முலாம் பூசும் பணிக்காக உண்ணிகிருஷ்ணனிடம் ஒப்படைக்குமாறு திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்திடம் சுதீஷ்குமாா்தான் பரிந்துரைத்துள்ளாா். மேலும் நடைமுறைக்கு மாறாக திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் திருவாபரணம் ஆணையா் இல்லாமல், சிலைகளில் இருந்து அந்தக் கவசங்கள் எடுக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது’ என்றாா்.
மூன்றாவதாக கைது: ஏற்கெனவே இந்த மோசடி தொடா்பாக உண்ணிகிருஷ்ணன் போற்றி, சபரிமலை முன்னாள் நிா்வாக அதிகாரி பி.முராரி பாபு ஆகியோா் கைது செய்யப்பட்ட நிலையில், மூன்றாவதாக சுதீஷ்குமாா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரை ஞாயிற்றுக்கிழமை வரை (நவ.2) நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க பத்தனம்திட்டாவில் உள்ள குற்றவியல் நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.