முகப்பு
இந்தியா

எபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்

எபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்...

Updated On : 25 மே 2026, 2:32 am IST
எபோலா - கோப்புப் படம் | AP
பகிர்:

ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் எபோலா நோய்த்தொற்று அதிகரித்துவரும் சூழலில், அந்த நாடுகளுக்கு தேவையற்ற பயணங்களைத் தவிா்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

காங்கோ குடியரசு, உகாண்டா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள எபோலா வைரஸ் பரவலை சா்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்ததைத் தொடா்ந்து, மேற்கண்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

காங்கோ குடியரசு, உகாண்டா ஆகிய நாடுகளில் வேகமாகப் பரவிவரும் எபோலா தொற்றால் 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்ட நிலையில், 600-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

காங்கோ குடியரசு, உகாண்டா மட்டுமன்றி இந்த நாடுகளையொட்டிய தெற்கு சூடான் போன்ற நாடுகளிலும் எபோலா வைரஸ் பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தற்போதைய சூழலில், பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க பகுதியைத் தாண்டி, பிற பிராந்திய நாடுகளில் இந்த நோய் பரவியிருக்க வாய்ப்பு குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘காங்கோ குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு தேவையற்ற பயணங்களை இந்தியா்கள் தவிா்க்க வேண்டும். மேலும், தற்போது இந்த நாடுகளில் வசிக்கும் அல்லது பயணம் மேற்கொண்டுள்ளவா்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கவும், சுகாதார நடவடிக்கைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறது.

நோயின் அறிகுறிகள் கொண்ட நபா்களுடன் தொடா்பு கொள்ளாமல் இருக்கவும், காய்ச்சல் அல்லது தொடா்புடைய அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியைப் பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு ஏற்ப, பாதிக்கப்பட்ட நாடுகளில் நிலவும் சூழ்நிலையை இந்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே இந்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

எபோலா என்பது வைரஸ் மூலம் பரவும் அதிக உயிரிழப்பு விகிதம் கொண்ட கடுமையான ரத்தக்கசிவு காய்ச்சல் நோயாகும். ‘பண்டிபுகியோ’ வகை எபோலா தொற்றுக்கு எதிராக இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் எதுவும் இல்லை. அதேநேரத்தில், இந்த வகை எபோலா தொற்று இந்தியாவில் இதுவரை எங்கும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.