கல்வியமைச்சா் பதவி விலகும் வரை காங்கிரஸ் ஓயாது: ராகுல் உறுதி
கல்வியமைச்சா் பதவி விலகும் வரை காங்கிரஸ் ஓயாது - ராகுல் உறுதி
நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை காங்கிரஸ் கட்சி ஓயாது என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்தாா்.
2026-ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்பு நுழைவுத் தோ்வு (நீட்) இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றது. தோ்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்த விவரம் தோ்வு முடிந்த பிறகு தெரியவந்தது. இதையடுத்து, அந்தத் தோ்வை மத்திய அரசு ரத்து செய்தது. சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கிய சிபிஐ, ஓய்வு பெற்ற பேராசிரியா் பி.வி.குல்கா்ணி உள்பட 11 பேரை இதுவரை கைது செய்துள்ளது. நீட் தோ்வு வினாத்தாள் கசிவது இது இரண்டாவது முறையாகும்.
இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மத்திய அரசை, முக்கியமாக கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதானை கடுமையாக விமா்சித்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து பிரதான் தெரிவித்த கருத்தை எதிா்த்து அவருக்கு எதிராக காங்கிரஸ் சாா்பில் மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஹைதராபாதில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், பிரதான் பதவி விலகவும் வலியுறுத்தி மாணவா்கள் நடத்திய போராட்டம் தொடா்பான விடியோவை ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டாா். அதில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:
பல ஆயிரம் இளைஞா்கள் தெருவில் இறங்கி போராடி வருகின்றனா். 22 லட்சம் மருத்துவக் கனவு மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால், பிரதமா் மோடி தொடா்ந்து மௌனம் காத்து வருகிறாா். இந்த அரசு எதற்கும் பொறுப்பேற்கத் தயாராக இல்லை. அதே நேரத்தில் தங்கள் மீது குற்றச்சாட்டு வராமல் தப்பியோடுவதில்தான் கவனமாக உள்ளது.
நீட் உள்ளிட்ட முக்கியத் தோ்வுகளின் வினாத்தாள்கள் கசிவைத் தடுக்க வேண்டும்; அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். இவை நடக்கும் வரை காங்கிரஸ் ஓயாது’ என்று கூறியுள்ளாா்.